நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மக்களவைத் தொகுதிகளில், நாளை (05.04.2014) நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேருரையாற்றுகிறார். முதலமைச்சரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான கு.பரசுராமனை ஆதரித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வாக்கு சேகரிக்கிறார்.
தஞ்சாவூர் தொகுதியைத் தொடர்ந்து, திருச்சி மக்களவைத் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரும், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளருமான ப.குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
இதற்காக, பொன்மலை ஜி கார்னர் அருகே பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவருகை முன்னிட்டு திருச்சி மற்றும் தஞ்சாவூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
– இரா.அருண்கேசவன்