டி.ஆர்.பாலுவின் மனைவிகள் பொற்கொடி மற்றும் ரேணுகாதேவி மகன்கள் ராஜ்குமார் மற்றும் செல்வகுமார் ஆகியோரின் தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு கொண்டுவரப்பட்ட சுயநலத் திட்டம் தான் சேது சமுத்திரத்திட்டம் : தஞ்சாவூர் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பேச்சு!

jjvisitதமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறமுள்ள மாநகராட்சி மைதானத்தில் இன்று (05.04.2014) பிற்பகல் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

தேர்தல் ஆணையத்தின் நத்தை விதிமுறைகளின் காரணமாக வேட்பாளரின் பெயரைக் கூட சொல்லி வாக்கு சேகரிக்க முடியலையே என்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மிகவும் வருத்தப்பட்டார்.

இரவு பத்து மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யலாம் என்ற தேர்தல் கமிஷனின் அறிவிப்பு நகைப்புக்குறியதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

டி.ஆர்.பாலுவின் மனைவிகள்  பொற்கொடி, ரேணுகாதேவி மகன்கள் ராஜ்குமார், செல்வகுமார் மற்றும் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோரின் தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு கொண்டுவரப்பட்ட சுயநலத்திட்டம் தான் சேது சமுத்திரத்திட்டம் என்று ஆதாரப்பூர்வமாக மக்களுக்கு விளக்கினார்.

அது மட்டுமல்லாமல் டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே மீத்தேன் எரிவாயு திட்டத்தில் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறினார்.

பத்து ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்தக் கூட்டணியிலே அங்கம் வகித்த தி.மு.க.வும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. மாறாக மக்களுக்குக் கெடுதல் புரிந்த அரசு மத்திய காங்கிரஸ் அரசு. அதற்கு ஒத்துழைப்பு அளித்து ஒன்பது ஆண்டு காலம் பதவியிலே ஒட்டிக் கொண்ட கட்சி தி.மு.க.

 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குவது தஞ்சாவூர். தஞ்சாவூரின் உயிர்நாடியாக இருப்பது காவிரி நதி நீர். காவிரி நதி நீரில் நமக்குரிய பங்கைப் பெற்றுத் தரவும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடவும், கர்நாடக அரசு நமக்குரிய பங்கைத் தருவதைக் கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 கர்நாடகத்தில் உள்ள தன் குடும்ப வியாபாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டார் கருணாநிதி. இதுதான் அவருடைய மக்கள் பணி. 

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அதன் இறுதி ஆணை 2007 ஆம் ஆண்டே வெளியிடப்பட்டது. அப்போது தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் இருந்தது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழக முதல்வர் பொறுப்பில் கருணாநிதி இருந்தார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தக் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை வெளியிட மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காகவா 2004 -ஆம் ஆண்டும், 2009 -ஆம் ஆண்டும் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் தமிழக மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினர். வாக்களித்த மக்களுக்கு செலுத்திய நன்றி இதுதானா? இதைவிட துரோகம் வேறு என்னவாக இருக்க முடியும்? காவிரி பிரச்சனையில் மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், தி.மு.க-வுக்கு வருகிற மக்களவைத் தேர்தலில் மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

நான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூலமாகப் போராடி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்யப்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்,

காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான், நமக்குரிய தண்ணீரை கர்நாடகம் வழங்குவது உறுதிபடுத்தப்படும். ஆனால், இவற்றை அமைக்க மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. எனவே, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

 அ.இ.அ.தி.மு.க அங்கம் பெறும் மத்திய ஆட்சி அமையும்போது காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பேசினார்.

 -இரா.அருண்கேசவன்