ஆந்திராவில் பா.ஜ.க.–தெலுங்கு தேசம் இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தை 05.04.2014 இரவு இறுதி கட்டத்தை எட்டியது. சந்திரபாபு நாயுடு வீட்டில் தெலுங்கு தேசம் தலைவர்களுடன் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜவதேக்கர், அகாலிதள எம்.பி. நரேஷ் குஜ்ரால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதிஷ் ஆகியோர் நடத்திய தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி, தெலங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதியில் 8 தொகுதியும், 119 சட்டசபை தொகுதிகளில் 45 தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சீமாந்திராவில் மொத்தம் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதியில் 5 தொகுதியும், 175 சட்டமன்ற தொகுதியில் 15 தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எந்தெந்த தொகுதிகள் என்பதில் இருகட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது. இதனால் தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே கூட்டணிக்கு இருக்கட்சிகளின் தொண்டர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அடித்தளமே இல்லாத பா.ஜ.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியினர் போர்க்குரல் உயர்த்தி உள்ளனர். அதேபோல், தெலங்கானா பகுதியில் செல்வாக்கு இல்லாத தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைந்தால் பாரதிய ஜனதாவுக்குத்தான் நஷ்டம் ஏற்படும் என்று தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் சிவன்ரெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், தெலங்கானாவில் மொத்தம் உள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர்.