தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று (07.04.2014} நடைபெற்றது.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் மணிரத்தினத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளரான அவரது மனைவி சுதாவியின் மனு ஏற்கப்பட்டுள்ளது.
பா.ம.க வேட்பாளர் மணிரத்தினத்திற்கு 10 பேர் முன்மொழியாததால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு மனு தாக்கலின் போது 10 பேர் முன்மொழிய வேண்டும் என விதி இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
இதனிடையே, சிதம்பரம் தொகுதிக்கு பா.ம.க.வின் மாற்று வேட்பாளராக மணிரத்தினத்தின் மனைவி சுதா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி பரிசீலனை செய்தார். இந்நிலையில், சுதாவின் மனுவை தேர்தல் அதிகாரி சரவணவேல்ராஜ் ஏற்றுக் கொண்டார்.
அதே போல், நீலகிரி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் மனுக்களை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்துள்ளார்.
நீலகிரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.குருமூர்த்தியும், மாற்று வேட்பாளராக அன்பரசும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களின் மனுவை இன்று (07.04.2014} பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கடிதம் தாமதமாக தந்ததால் இருவரின் மனுவைவும் தள்ளுபடி செய்ததாக விளக்கம் அளித்தார்.
இதனால், நீலகிரி தொகுதியில் பா.ஜ.க போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்