சீன பட்டாசுகளின் இறக்குமதியை கண்டித்தும், லைசென்சு கட்டணத்தை ரத்து செய்ய கோரியும் மத்திய அரசுக்கு எதிராக சிவகாசியில் இன்று (15.04.2014) பந்த் நடைபெற்றது.
ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் பட்டாசுத் தொழிற்சாலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மார்ச் 20–ந் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், பட்டாசு கிட்டங்கி உரிமக் கட்டணத்தை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து, நான்கு இலட்சமாக உயர்த்தியது. அதேபோல புதுப்பித்தல் உரிமக் கட்டணம் இதுவரை 100 ரூபாயாக இருந்ததை 3,000 ரூபாயாக உயர்த்தியது. இதனால் சிவகாசியில் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 11.04.2014 அன்று விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பட்டாசு தொழிலுக்கு என தனி விதிமுறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஆவன செய்யுமா?ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
-கே.பி.சுகுமார்