கர்பால் சிங் மலேசியாவில் ஒரு மூத்த அரசியல்வாதி ஒரு பிரபலமான வழக்குரைஞர். 1978 -ல் இருந்து 1999 வரை ஜோர்ஜ் டவுன், பினாங்கு ஜெலுத்தோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2004 ஆம் ஆண்டில் இருந்து, புக்கிட் குளுகோர் ஜோர்ஜ் டவுன், பினாங்கு ஜோர்ஜ் டவுன், பினாங்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும், 29 ஆண்டுகளாகச் சேவையாற்றி வந்தார். இவர் ஜனநாயக செயல் கட்சியின் முன்னாள் தேசியத்தலைவர். அவர் இன்று அதிகாலையில் நடந்த ஒரு கோர சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.
மலேசிய நாடாளுமன்றத்திலும், மலேசிய நீதிமன்றங்களிலும் வாதத்துக்கிடமான மனிதராகப் பெயர் பெற்ற இவர், பலமுறை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க விரோதக் கருத்துகள் எனக் கருதப்படும் காரணங்களுக்காக, இவர் 1987 ஆம் ஆண்டு, மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கமுந்திங் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். மலேசியாவில் இவருக்கு ‘ஜெலுத்தோங் புலி ‘எனும் அடைமொழிப் பெயரும் உண்டு.
மலேசியாவில் பல பிரபலமான உயர்மட்ட அரசியல், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் வாதாடியுள்ள இவர், அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கில் எதிர்த்தரப்பின் தலைமை வழக்குரைஞராகவும் பொறுப்பேற்று இருந்தார். மலேசியாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை இவர் எதிர்த்துப் போராடி வந்தார்.
இந்நிலையில் இன்று(17.04.2014) அதிகாலை மணி 1.10 க்கு வடக்கு தெற்கு நெஞ்சாலை (வடக்கு பாதை), 301.6 கிமீ, பேராக் அருகே இந்த கோர சாலை விபத்து நடந்தது. ஜோர்ஜ் டவுனில் நடைபெறவிருக்கும் வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்கு கர்பாலும் அவர் மகன், அவர் உதவியாளர் மற்றும் பணிப்பெண்ணும் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி இவ்விபத்து நடந்தது.
கர்பால் மற்றும் அவரின் உதவியாளர் விபத்து நடந்த இடத்திலேயே உயிர் துறந்தனர். அவரின் மகன், கார் ஒட்டுநர், மற்றும் பணிப்பெண் இந்த விபத்திலிருந்து தப்பினர்.
கார்பாலின் கார் மீது மோதிய லாரியின் ஓட்டுநரும் அதிலிருந்த மூன்று பயணிகளுக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை. அந்த லாரி ஒட்டுநர் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது.
மலேசிய பிரதமர் நஜிப் டிவிட்டர் மூலம் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். “நான் இப்போதுதான் அங்காரா வந்து சேர்ந்த வேளையில் மாண்புமிகு கர்பால் சிங் சாலை விபத்தில் மரணமுற்றதாக கேள்விப்பட்டேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்”, என்று அந்த டிவிட்டர் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2005 ஜனவரி 28 -ல் ஒரு கார் விபத்தில் சிக்கிய கர்பால் சிங், முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, சக்கரவண்டியைப் பயன்படுத்தி வருகிறார். ஒரு வாடகைக்காரில், பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போது, பின்னால் இருந்து வந்த கார் மோதியதால் விபத்து ஏற்பட்டது. அவர் சக்கரவண்டியைப் பயன்படுத்துவதால், மலேசிய நாடாளுமன்றத்தில் அவருக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அவர் சக்கரவண்டியில் அமர்ந்தவாறே பிரசாரம் செய்து வெற்றி பெற்றார். விபத்தின் காரணமாக அவருக்கு ரிங்கிட் 2 மில்லியன் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
-ஆர்.சத்தியமூர்த்தி