கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி லோக்சபா தொகுதிகளில் இன்று (17.02.2014) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, குஜராத்தை விட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பதிலடி கொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் தொடர்பான தவறான தகவல்களை வைத்து அம்மாநிலம் முன்னணி மாநிலம் என்ற கற்பனை உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க அரசு மக்கள் நலனைப் பற்றி சிந்திக்கிறது. ஆனால், குஜராத் அரசு சாதனை செய்துவிட்டதாக சொல்லி விளம்பரப்படுத்துவதில் அக்கறை கொள்கிறது.
குஜராத்தை விட தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. குஜராத்தில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 38 குழந்தைகள் ஒரு வயதுக்கும் கீழேயே உயிரிழந்துவிடும் நிலை இருக்கிறது.
உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் உள்நாட்டு உற்பத்தியில் குஜராத்துக்கு 5-வது இடம்தான். அன்னிய முதலீட்டைப் பெறுவதிலும் தமிழகமே முன்னணியில் இருக்கிறது. தமிழகத்துக்கான அன்னிய முதலீடு ரூ.13,250 கோடி. ஆனால், குஜராத்துக்கான அன்னிய முதலீடு ரூ.2,676 கோடி மட்டும்தான்.
நதிகள் இணைப்பு குறித்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசில் பேசப்பட்டதே தவிர, நரேந்திர மோதி சொல்வதைப் போல இணைப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
சென்னை மீனம்பாக்கத்தில் பேசிய பா.ஜ.க.வின் குஜராத் முதல்வர் நரேந்திர மோதி, தி.மு.க.வுடன் சேர்த்து அ.இ.அ.தி.மு.க.வும் மக்களை பற்றி சிந்திக்கவில்லை என்று சொல்கிறார்.
இந்தியாவிலேயே சதாசர்வ காலமும் மக்களைப் பற்றி சிந்திக்கிற ஒரே இயக்கம் அ.இ.அ.தி.மு.க.தான். மக்களைப் பற்றி சிந்திப்பதாலேயே எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அ.இ.அ.தி.மு.க அரசு செயல்படுத்துகிறது என்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆதாரப் பூர்வமாகப் பட்டியலிட்டார்.
அத்துடன் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 4 -வது இடம். ஆனால், குஜராத்துக்கு 11-வது இடம்தான். தமிழகத்தில் மொத்த தொழிற்சாலைகள் 36,996. குஜராத்தில் 22,000 ஆயிரம்தான். அதேபோல் தமிழகத்தில் தொழிலாளர்கள் எண்ணிக்கை 15 லட்சம். குஜராத்தில் 10 லட்சத்து 50 ஆயிரம்தான்.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவுக்கே வழிகாட்டும் அரசு அ.இ.அ.தி.மு.க தான் என்பதை நினைவூட்டுகிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோதிக்கு பதிலடி கொடுத் துள்ளார்.
-இரா.அருண்கேசவன்.