காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த 24.04.2014 வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிர் இழந்ததுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அங்குள்ள கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுத படையினரும் 25.04.2014 இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி தாக்கியதில் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனும், ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.
மேஜர் முகுந்தின் உடல் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் இன்று கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு இரவு கொண்டு வரப்படுகிறது.
நாளை (28.04.2014) மேஜர் முகுந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் குரோம்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது. தீவிரவாதிகள் தாக்குதலில் மேஜர் முகுந்த் பலியான சம்பவம், அவரது தந்தை வசிக்கும் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாத தாக்குதலில் பலியான தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்க்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுக்குறித்து தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.04.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.
– எஸ்.சதீஸ்சர்மா.