சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது!

Chennai Central Railway StationCRS CHENNAI.jpgoCRS CHENNAI.jpg4CRS CHENNAI.jpg2 CRS CHENNAI.jpg1CRS CHENNAI CRS CHENNAI.jpg3CRS CHENNAI.jpg6

சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.15 மணி அளவில் குண்டு வெடித்தது.

பெங்களூருவில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் வழியாக செல்கிறது. அந்த ரயில் இன்று (01.05.2014 ) காலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள 9-ம் எண் பிளாட் பாரத்தில் வந்தது.

7.15 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்–4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த வினாடியே அருகில் உள்ள எஸ்–5 முன்பதிவு பெட்டியிலும் பயங்கர சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்தது. அடுத்தடுத்து வெடித்த இரு குண்டுகளும் பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்ததாகும்.

இதனால் எஸ்–4, எஸ்–5 இரு பெட்டிகளிலும் ஒரு பகுதி நொறுங்கியது. இருக்கைகள், கண்ணாடிகள் சிதறின. இதில் சிக்கிக் கொண்ட பயணிகள் அலறினார்கள். உயிர் பிழைக்க சிதறி ஓடினார்கள். இதையடுத்து அருகில் இருந்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

குண்டுகள் வெடிக்கின்றன என்ற தகவல் பரவியதும் உடமைகளை கூட எடுக்காமல் பயணிகள் அலறியடித்தப்படி ரெயிலில் இருந்து இறங்கினார்கள். இதனால் 9–வது பிளாட்பாரத்தில் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இதற்கிடையே குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் 9–வது பிளாட் பாரத்துக்கு விரைந்தனர்.

குண்டுகள் வெடித்த இரண்டு பெட்டிகளிலும் ஏறி பார்த்த போது சுமார் 14 பேர் காயங்களுடன் கிடப்பது தெரிந்தது. அவர்களை மீட்டு ரெயில் பெட்டிகளில் இருந்து கீழே இறக்கினார்கள்.

அப்போது எஸ்–4 பெட்டிக்குள் ஒரு இளம்பெண் குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி இருப்பது தெரிந்தது. போலீசார் அவர் உடலை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான அந்த பெண்ணின் பெயர் சுவாதி (வயது 22) என்றும், ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்றும், பெங்களுருவில் இருந்து விஜயவாடா பயணம் செய்த போதுதான் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

காயம் அடைந்த 14 பயணிகள் அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த பயணிகளில் 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

குண்டு வெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம்:
1.சுமன்,
2.சண்டிலா,
3.ஆஞ்சநேயலு,
4.சரண்வர்மா,
5.முரளி,
6.பிஜன்குமார்,
7.விமல்குமார்,
8.சதன்குமார்,
9.ஹரி,
10.உமாராணி,
11.சோடன் மார்மன்,
12.அல்டாப்கான்,
13.ஜிதின் ரா,
14.சோடன் தீபக்
இவர்கள் அனைவரும் ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம், மணிப்பூர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் சுமார் 500 பேர் குவிக்கப்பட்டனர். அவர்கள் முதல் கட்டமாக கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏறி சோதனை நடத்தினார்கள். தீவிரவாதிகள் வேறு ஏதாவது குண்டுகள் வைத்துள்ளார்களா? என்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்ட்ரலில் இருந்து மற்ற நகரங்களுக்கு புறப்பட்டு செல்லும் ரெயில் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்களின் பெட்டிகளிலும் போலீசார் சோதனையிட்டனர். அதில் வேறு எங்கும் குண்டுகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதுபோல சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி வந்த மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவற்றிலும் குண்டுகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு இன்று (01.05.2014 ) காலை 9.30 மணிக்குப் பிறகு ரெயில் சேவை தொடங்க ஆரம்பித்தது. குண்டு வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் எஸ்–4, எஸ்–5 பெட்டிகளை மட்டும் விட்டு, விட்டு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உதவி மையத்தை தொடர்புகொள்ள 044-25357398 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து எழும்பூர் ரயில்நிலையம் மற்றும் சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு சம்பவத்தால் தமிழக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் காவல்துறை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இருந்து புறப்பட்ட கவுகாத்தி எக்ஸ்பிரஸையும், பயணிகள் அனைவரையும் மற்றும் இடையில் நின்ற நிறுத்தங்களில் ஏறி, இறங்கிய நபர்களையும், அதிரடி சோதனை நடத்தியிருந்தால், இந்த குண்டு வெடிப்பை தவிர்த்திருக்கலாம். பாதுகாப்பு குறைப்பாடுகள்தான் இந்த குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

சி.மகேந்திரன், பா.சீனிவாசன்.