குண்டு வெடிப்பும் ஜெயலலிதாவின் கொடநாடு தங்கலும்! விகடன் ஊடகத்தின் விஷமத்தனம்!

vikatan-logo2இன்று (02.05.2014) மதியம் 1.46 மணிக்கு விகடன் இணையதளம் ‘கருத்துக் களம்’ என்ற பகுதியில், குண்டுவெடிப்பும் ஜெயலலிதாவின் கொடநாடு தங்கலும்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களை முடுக்கிவிட வேண்டிய முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதா, கொடநாட்டில் தங்கி உள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

நெருக்கடியான நேரத்தில் கூட முதல்வர் தலைநகரில் இல்லாத காரணத்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாத காரணத்தாலும்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளதாக தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ள நிலையில், காவல் துறையினரை வழிநடத்தி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டிய அந்தத் துறையின் பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர், நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால்தான், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கருணாநிதியின் இந்த குற்றச்சாட்டு மற்றும் ஜெயலலிதா தொடர்ந்து கொடநாட்டில் தங்கியிருப்பது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று விகடன் இணையதளம் தனது வாசகர்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது.

ஏதோ, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா சென்னையில் இல்லாத காரணத்தினால்தான், தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவியதைப்போலவும், கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை சென்ட்ரல் நிலையத்தில்தான் வெடிகுண்டு வைத்ததைப் போலவும், அதற்கு தமிழக அரசின் அலட்சியமும், பாதுகாப்பு குறைபாடும்தான் காரணம் என்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி முன்மொழிந்திருக்கிறார். இதை “விகடன் ஊடகம்” தொடர்ந்து வழிமொழிந்து கொண்டிருக்கிறது.

இரயில்வே கால அட்டவணை

இரயில்வே கால அட்டவணை

வழக்கமாக கவுகாத்தி எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இரவு 11.30 மணிக்கு புறப்படும். அந்த ரெயில் சென்னைக்கு அதிகாலை 5.40 மணிக்கு வந்து சேரும். சென்னையில் சுமார் 40 நிமிடங்கள் நிற்கும். பயணிகளை இறக்கி, ஏற்றி விட்டு காலை 6.20 மணிக்கு புறப்படும். 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரெயிலில் சென்னையில் இருந்து தினமும் நூற்றுக் கணக்கானோர் செல்வதுண்டு.

குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற நேற்று (01.05.2014) காலை 5.40 மணிக்கு வந்து சேர வேண்டிய கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக காலை 7.05 மணிக்குத்தான் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 9–வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது.

பெங்களூரில் இருந்து கவுகாத்தி எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு முன்பு ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளையும், பயணிகள் அனைவரையும் மற்றும் இடையில் நின்ற நிறுத்தங்களில் ஏறி, இறங்கிய நபர்களையும் அதிரடி சோதனை நடத்தியிருந்தால், இந்த குண்டுவெடிப்பு சம்பவமே நிகழ்ந்திருக்காது. இந்த அசம்பாவிதத்தை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். பாதுகாப்பு குறைப்பாடுகள்தான் இந்த குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

அப்படியானால், இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு தமிழகம் எப்படி பொறுப்பேற்க முடியும்? இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கொடநாட்டில் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? கொடநாடு என்ன செவ்வாய் கிரகத்திலா இருக்கிறது? தமிழகத்தில் தானே இருக்கிறது!

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமும், பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளார். இந்த குண்டுவெடிப்பை தான் கூட இருந்தே கவனித்ததைப் போல முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை, விகடன் ஊடகம் விவாதப் பொருளாக மாற்றியுள்ளது. அப்படியானால், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியும், விகடன் ஊடகத்தினரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கத் தயாரா?

தொழில் நுட்ப வசதிகள், காணொளி காட்சி போன்றவை மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாருடனும் நினைத்த நேரத்தில் தொடர்பு கொண்டு பேசிடவும், நேருக்கு நேர் உரையாடிடவும் முடியும்.

இன்றைய இளைய தலைமுறையினர் முதல் சாதாரண குடிமக்கள் வரை நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளோருடன் சர்வ சாதாரணமாக உரையாடும் போது, முதல்வர் பதவியில் இருக்கும் ஜெ.ஜெயலலிதா அப்படி செய்ய முடியாதா? தலைநகரில் இருந்துதான் காவல் துறையினருக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டுமா?

இன்றைக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் கூட, பெரும்பாலும் காணொளி காட்சி மூலம் நடைபெறுகின்றன. தொலைதொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் ஒரு முதல்வர் எங்கு இருக்கிறார் என்பதெல்லாம் ஒரு பிரச்னையா? எப்படி பிரச்சனைகளை கையாளுகிறார் என்பதுதானே முக்கியம்.

கடந்த காலத்தில் இதே மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமும், அதை சுற்றி நின்று காவல்துறை வேடிக்கை பார்க்கும் சம்பவமும் நடந்தது.

காவல்துறையினர் உயர் நீதிமன்றத்திற்குள்ளே புகுந்து, நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களையும் தாக்கிய சம்பவமும் நடைபெற்றது. அப்போதெல்லாம் முதல்வராக இருந்த மு.கருணாநிதி என்ன செய்தார்? இந்த விகடன் ஊடகம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தது?

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.