இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்காவிலுள்ள ஆடம்பர பங்களாவில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோத்தபாய ராஜபக்ச 1992-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியுரிமை உரிமை பெற்றிருந்தார். இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இவர், 2005-ல் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியானதும், கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை அச்சுறுத்தல்கள் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்கா செல்வதையே தவிர்த்து வருகிறார்.
எனினும், அவர் அமெரிக்காவில் ஆடம்பரமான பங்களா ஒன்றை அண்மையில் வாங்கியிருந்தார். இதில் பணிப்பெண் உள்ளிட்ட அவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த ஆடம்பர பங்களாவுக்கு சென்றுள்ள சில அதிகாரிகள், கோத்தபாய ராஜபக்ச தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எனினும், தாங்கள் யார்? எதற்காக இந்த விசாரணை? என்ற விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இதனால் கோத்தபாய ராஜபக்ச குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.