நரேந்திரமோதி பதவியேற்பு விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜப்பட்ஷேவுக்கு அழைப்பு : தமிழகம் கொந்தளிப்பு!

sri-lanka-president-இந்திய பிரதமராக நரேந்திரமோதி பதவியேற்பதை முன்னிட்டு, சார்க் நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நரேந்திரமோதியின் பதவியேற்பு விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜப்பட்ஷே, வரும் 26 ந் தேதி இந்தியாவிற்கு வரவிருக்கிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியின் தலைவர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்த, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இதற்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனி தமிழ் ஈழத்தை பா.ஜ.க. ஆதரிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், இலங்கையை பிரிப்பதில் பாரதிய ஜனதாவுக்கு உடன்பாடு இல்லை. இலங்கை தமிழர் பிரச்னைக்கு எந்த வகையான தீர்வு என்றாலும், அது அந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும்” என்று கிட்டத்தட்ட ராஜபட்ஷேவின் பிரதிநிதிகளைப் போலவே, பா.ஜ.க. மூத்தத் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், தேர்தலுக்கு முன்பே தெரிவித்தார்களே! இது வைகோவிற்கு தெரியாதா? பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்து, இப்போது நீங்கள் என்ன வாரிகட்டினீர்கள்?

இலங்கை பிரச்சனையில், உங்கள் வாயை அடைப்பதற்கு ஏதாவது ஒரு வீணாப் போன பதவியை கொடுப்பதற்கு பா.ஜ.க. தலைமை முன் வந்தாலும் வரும். புத்திசாலிதனமாக அதை தவிர்ப்பதற்கு பாருங்கள். இல்லையென்றால், காங்கிரஸ் கூட்டணியில் மு.கருணாநிதிக்கு ஏற்பட்ட அதே நிலமை, எதிர்காலத்தில் உங்களுக்கும் ஏற்படும். இனிமேலாவது புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில், அப்பாவி இலங்கை தமிழர்களை ஈவு, இரக்கமின்றி படுகொலை செய்த சர்வதேச போர்குற்றவாளி ராஜப்பட்ஷேவுக்கு, பாரதிய ஜனதா கட்சி சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்க முன் வந்து இருப்பது இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏனென்றால், காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும், அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழர்களை கொடுமைப்படுத்துவதிலும், தமிழர்களை கொன்று குவிப்பதிலும், தமிழகத்தின் உரிமைகளை கொள்ளையடிப்பதிலும், இதுநாள் வரை இரு தேசிய கட்சிகளும் ஒன்றுமையாக தான் இருந்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.

இலங்கை தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் பிரச்சனையாக இருந்தாலும், கச்சத்தீவு பிரச்சனையாக இருந்தாலும், காவிரி நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும், முல்லை பெரியாறு அணை பிரச்சனையாக இருந்தாலும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும், எதிராகதான் இதுநாள் வரை செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இந்தியாவை பொருத்தவரை இத்தேர்தல் மூலம் வெட்டுகிறவன் தான் மாறி இருக்கிறானே தவிர! அரிவாள் என்னமோ ஒன்றுதான்!

அதனால்தான், இரு தேசிய கட்சிகளும் எங்களுக்கு தேவையிலலை என்று, தமிழக மக்கள் இத்தேர்தலில் தெளிவாக முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இலங்கை விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்ன மாதிரியான கொள்கைகளை கடைபிடித்ததோ, அதை அப்படியே பாரதிய ஜனதா கட்சி பின்பற்றத் தொடங்கியுள்ளது.

இந்திய நாட்டு மீனவர்கள் 800-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் கூட, முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. மத்தியில் எதிர்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி மவுனமாக இருந்து இதையெல்லாம் வேடிக்கை பார்த்ததே! இதற்கு என்ன அர்த்தம்? இலங்கையிடம் ஏன் இத்தனை பரிவு?

பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் அது ஹிந்தி பேசும் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்ற கட்சி. அதாவது, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏகோபித்த ஆதரவு பெற்ற கட்சி.

இந்த மாநிலங்களில் தான் சிங்களவர்களின் மூதாதையர்கள் உலாவிய பூமியாக சிலாகித்துக் கொள்கிறார்கள். அதனால் தான், மத்திய பிரதேசத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும், சிங்களவர்கள் தாய் வீட்டுக்கு வந்து போவதைப் போல சகஜமாக வருகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற பாரதிய ஜனதா அரசு, ராஜபட்ஷேக்கு ஆதரவாக இருக்குமா? தமிழர்களுக்கு ஆதரவாக இருக்குமா?

“வெள்ளாட்டுடன் நட்புக் கொள்வதால் வேங்கை வள்ளலாருக்கு வாரிசாகுமா? படமெடுக்கும் பாம்புக்குப் பால் வார்த்து, நேசத்துடன் நெஞ்சில் வைத்துக் கொஞ்சினால், கொல்லும் விஷத்தை அடியோடு விலக்கி விட்டு அன்றாடம் அது அகிம்சையைப் போதிக்குமா?

கோடி லிட்டர் பாலைக் கொட்டி குடமுழுக்குச் செய்தாலும், பாரதிய ஜனதா என்னும் கரித்துண்டின் கறுப்பு நிறத்தை மாற்றி விட முடியாது. சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே, பாரதிய ஜனதாவின் அணுகுமுறை இருந்தாக வேண்டும் என்பது அதன் பிறப்பிலேயே அழுத்தமாக எழுதப்பட்ட அரசியல் விதி” என்று “இன்று புதிதாய் பிறப்போம்“ என்ற நூலில் அன்று தமிழருவி மணியன் எழுதியிருக்கிறார். அதே தமிழருவிமணியன் தான் இன்று இப்போதைய பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைவதற்கு தரகு வேலை செய்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இதற்கு தமிழருவிமணியன் என்ன பதில் சொல்ல போகிறார்?

-டாக்டர்.துரைபெஞ்சமின்.