இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை: இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்!

இலங்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி எதிர்வரும் 26-ம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வுக்கு, தன்னுடன் வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களுக்கு, இலங்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று (23-05-2014) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களுக்கு, இலங்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய கடிதம்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களுக்கு, இலங்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய கடிதம்.

கௌரவ பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர், வெளிவிவகார அமைச்சர்.

மாண்புமிகு அமைச்சர் வர்களுக்கு,

இன்றைய திகதிய உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன். இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ள தாமதமாகியேனும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் எனக்கனுப்பிய அழைப்பைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

எமது அமைச்சர் குழுவுடன் பேசியதன் பின் இந்தப் பதிலை உங்களுக்கு அனுப்புகின்றேன்.

ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது இலங்கை அரசாங்கத்தினரிடத்தில் வடமாகாணத்துடன் கூட்டுறவையும் ஒருங்கிணைந்து செயற்படும் தன்மையையும் எழுப்பியுள்ளமை நல்லதொரு சகுனமே.

வடமாகாண மக்களின் சொல்லொணாத் துயரங்கள், வடமாணசபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள், இவற்றின் மத்தியில் இக்கூட்டுறவுச் சிந்தனையானது வரவேற்கத்தக்கது.

எனினும் உங்களுடைய அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன். முக்கியமாக அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் மத்திக்கும், மாகாணத்திற்குமிடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக் காட்டக்கூடும் என்பதேயாகும்.

எனினும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர், மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகிறார்கள் என்பதும், வடமாகாண சபையைப் பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுமே உண்மை நிலையாகும்.

இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக்கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகஸ்துதிக்காக ஏற்றுக் கொள்வதாக அமையும். எனினும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரூடாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் ஏற்கனவே அனுப்பியுள்ளேன் என்பதைத் தெரியத் தருகின்றேன்.

உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால் பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உழைப்பும் எமக்குள் தொடருமென்று நான் எதிர்பார்க்கின்றேன்.
அவ்வாறு தொடர்ந்தால்தான வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவன மட்டுமன்றி, எமது மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுவன.

நன்றி.

அன்புடன்,
நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.