18 தொகுதிகளை கைப்பற்றிய எங்களுக்கு பவர் இல்லாத அமைச்சர் பதவி! தேர்தலில் தோற்றுப் போனவர்களுக்கு பசையுள்ள அமைச்சர் பதவியா? மத்திய அமைச்சரவையில் கனரக தொழிற்துறை ஒதுக்கப்பட்டதில் சிவசேனா கட்சி அதிருப்தி அடைந்துள்ளது.
நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வின் முக்கிய கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனாவுக்கு கனரக தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ஆனந்த் கீதேவுக்கு இந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் கீதேவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை தொடர்பாக சிவசேனா கட்சிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்துறைக்கான பொறுப்பை இன்னும் கீதே ஏற்காமல் உள்ளார். மேலும், மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை மாற்றப்பட வேண்டும். கனரகத் தொழில் துறைக்குப் பதிலாக வேறு துறையை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக தெரிவித்துள்ள கீதே, சிவசேனா கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே இது தொடர்பான இறுதி முடிவை அறிவிப்பார் என கூறினார்.
மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 42 தொகுதிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றியது. இதில் சிவசேனா மட்டும் 18 தொகுதிகளை கைப்பற்றி அம்மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. எனவே, அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் அளிக்க வேண்டும். அமைச்சரவையில் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களிடம் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவருக்கு, கல்வி அமைச்சர் பதவி!
பட்டப்படிப்பு கூட படிக்காதவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரே காரணத்திற்காக ஸ்மிரிதி இராணி மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு கல்வி மற்றும் மனித வள மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தனது கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜய் மக்கான், ”கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இராணி பட்டதாரி கிடையாது என்பது தேர்தலின் போது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சர்ச்சை!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சிறப்பு சட்டத்தால் அம்மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இது குறித்து மத்திய அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளதாக பிரதமர் அலுவலக இணையமைச்சரான ஜிதேந்திர சிங் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இந்த கருத்துக்கு காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவரான மெகபூபா முப்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
370-வது சிறப்பு சட்டம் தான் காஷ்மீர் மாநிலத்தையும், இந்தியாவின் மற்ற பகுதிகளையும் அரசியலமைப்பின் மூலம் இணைக்கிறது. அதை திரும்ப பெறுவதென்பது முட்டாள்தனமான செயல் என காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டித்துள்ளார்.
மெகபூபா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் அலுவலகம் இவ்விவகாரம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும், எந்த வகையிலும் இச்சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தப்படமாட்டாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கடும் கண்டனங்களுக்கு பின் ஜிதேந்திர சிங், தனது கருத்து ஊடக துறையினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரதமரை மேற்கோள் காட்டி, தான் ஒருபோதும் எதுவும் பேசவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நரேந்திர மோதி தலைமையிலான அரசுக்கு எதிரிகள் யாரும் வெளியில் இல்லை என்பது இப்போதே தெளிவாகிவிட்டது.
-ஆர்.பிரியதர்ஷிணி.