இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13-ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல் போன்ற சகல விடயங்களும், சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே தீர்மானிக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அவர்கள் தெளிவாக இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.
29.05.2014 நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் இலங்கை நீர்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் எவரது அழுத்தங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் இதனை செய்துவிட முடியாது. எவரும் எமக்கு உத்தரவிடவும் முடியாது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இந்தியா எமக்கு கூறுவதற்கு செவிமடுக்க முடியும். ஆனால் அவர்கள் கூறுவது போல எம்மால் செய்ய முடியாது. இரு நாடுகளிலும் பலம் வாய்ந்த அரசுகள் உள்ளன.
சர்வதேசத்துக்கு முன்னால் சார்க் வலய நாடுகள் ஒரே எண்ணத்திலான நிலைப்பாட்டை காண்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே, இந்தியப் பிரதமர் உள்ளார் என்றும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
13-வது திருத்தச்சட்டம் என்பது எம்மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டதொன்று என்பதை அனைவரும் அறிவார்கள். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் இது கொண்டுவரப்பட்டது. இதனை நாம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறோம்.
ஒரு கட்டத்தில் நாம் வட மாகாண சபையை உருவாக்க மாட்டோம் என்ற பிரச்சாரத்தை கொண்டு சென்றார்கள். இன்று வடமாகாண சபையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போது 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். முதலில் முழுமையாக என்றால் என்ன? 13-வது திருத்தச் சட்டத்தில் எதனை நடை முறைப்படுத்துவது எதனை நீக்குவது என்பது தொடர்பான முடிவை பாராளுமன்றமே எடுக்கும். அதற்காகவே அனைத்துக் கட்சிகளும் உள்ளடக்கியதாக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்கு வெளியே எங்கெங்காவது சென்று கூறித்திரிவதை விடுத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வர வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் இன்னமும் காலியாகவே காத்திருக்கின்றன என்றும் அமைச்சர் நிமல் தெரிவித்தார்.
இவர்களுடன் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.