நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழ்நாட்டின் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து பேச, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா டெல்லி செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா வருகிற 3–ந்தேதி டெல்லி செல்கிறார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோதியை அவரது சவுத் பிளாக் அலுவலகத்தில் சந்தித்து பேசுவார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோதியிடம், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை கொடுப்பார். அந்த மனுவில், மத்திய அரசில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழ்நாட்டின் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து கூறப்பட்டிருக்கும்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளில் உடனடியாக முன் உரிமை கொடுத்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பற்றியும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதோடு தமிழ்நாட்டின் நியாயமான உரிமைக்கும், விரைவான வளர்ச்சிப் பாதைக்கும் உறுதுணையாக இருக்க வலியுறுத்தியும், அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-சி.மகேந்திரன்.