சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சிஸ் பிரேம்குமார். கொடைக்கானல் செண்பகனூர் கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் படிப்பை முடித்த இவர், இத்தாலியில் ரோம் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜேசு சபையில் பாதிரியராக இறைப்பணி மற்றும் சமூகப் பணியாற்றி வந்தார்.
2012-ஆம் ஆண்டிலிருந்து, புலம் பெயர்ந்தோர் அமைப்பு என்ற தொண்டு நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானின் ஹெர்ட் நகரில் தங்கியிருந்து தீவிரவாத போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சமூகப் பணிகளிலே ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் குழுவில் இளைஞர்கள் சேருவதைத் தடுக்கும் முயற்சியில் இவர் நடவடிக்கை எடுத்ததால் தான், தீவிரவாதிகள் இவரைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட, சிவகங்கையைச் சேர்ந்த பாதிரியார் அலெக்ஸ் பிரேம்குமாரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று, பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆப்கானிஸ்தானில் கடந்த 2-ம் தேதி தமிழக பாதிரியார் அலெக்ஸ் பிரேம்குமார் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் தனிப்பட்ட முறையில் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் தலையிட்டால்தான் ஆப்கானிஸ்தான் விரைந்து செயல்பட்டு பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுக்கும் எனக் கூறியுள்ளார்.
-ஆர்.பிரியதர்ஷிணி.