தாயகத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு விடயத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடு, ஈழத்தமிழ் மக்களின் ஆழமான அரசியல் தாகங்களை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறது என்றும், உலக ஜனநாயக நெறிகளை சரியாக பிரதிபலிக்கிறது என்றும், இலங்கை, வடமாகாணசபை உறுப்பினர் துரை ராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தீவிலே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அரசியல் மற்றும் கலாச்சார இருப்பை தமிழர்கள் கொண்டு வந்திருக்கின்றனர்.
1500-களில் ஏற்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பின் போது தமிழர்கள் கொண்டிருந்த இறையாண்மை, இலங்கைத் தீவின் சுதந்திரத்தின் போது மீள வழங்கப்படவில்லை. மாறாக தமிழரின் இருப்பை இல்லாதொழிக்கும் நோக்கிலான இன அழிப்பு நடவடிக்கைகளே இங்கு வலுப்பெற்றன.
இறுதிப்போரின் இறுதிக்கணங்களில் உலகம் பார்த்திருக்க நடத்தப்பட்ட இன அழிப்பானது மனித நாகரீகத்தின் சோகமான அடையாளமாகும்.
இந்நிலையில் போரின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் வாழ்வு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. நுட்பமான இன அழிப்பு விடயங்கள் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன.
தமிழரின் பூர்வீக பிரதேசங்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் இன விகிதாசாரம் மாற்றப்படுகிறது. தமிழர்களின் வாழ்வாதார வழிகள் பல முடக்கப்பட்டு அவர்கள் மீது இடப்பெயர்வு அவசிய நிலை திணிக்கப்படுகிறது.
என்றுமில்லாத அளவுக்கு உச்சக் கட்டத்தை அடைந்துள்ள இன அழிப்பால் துவண்டிருந்த ஈழத் தமிழினம் சமீபத்திய இந்தியப் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை மிகவும் நம்பிக்கையோடு பார்க்கிறது.
இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை, மற்றும் தமிழர் நிரந்தரத் தீர்வு குறித்து தாயகத் தமிழர் மற்றும் புலம்பெயர் தமிழரிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்கிற கொள்கைகளை முன்வைத்து களம் கண்ட அ.தி.மு.க.-வின் இமாலய வெற்றி எமது நம்பிக்கையை மேலும் வலுவூட்டியிருக்கிறது.
தேர்தலுக்கு பின்னரும் ஈழத்தமிழர் தீர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைத் தொடரும் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாஅவர்களின் செயற்பாடுகள் பாராட்டுதலுக்குரியவை.
அவருடைய நிலைப்பாடுகள் ஈழத் தமிழரின் ஆழமான அரசியல் தாகங்களை வெளிப்படுத்தி நிற்பதோடு உலக ஜனநாயக நெறிகளை சரியாக பிரதிபலிக்கிறது.
பல இழப்புக்களைக் கடந்தும் எண்ணற்ற உயிர்த் தியாகங்களால் கட்டி எழுப்பப்பட்டதுமான உரிமைப் போராட்டத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள்.