காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை : மத்திய இரசாயனத்துறை அமைச்சர் அனந்த்குமார்!

மத்திய இரசாயனத்துறை அமைச்சர் அனந்த்குமார்.

மத்திய இரசாயனத்துறை அமைச்சர் அனந்த்குமார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை என்று மத்திய இரசாயனத்துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார். இது குறித்து பெங்களூரில் இன்று (07.06.2014) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி வெறும் வதந்தி மட்டுமே. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் இன்று (07.06.2014) தொலைபேசி மூலம் பேசினேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று உமாபாரதி என்னிடம் கூறினார். எனவே, கர்நாடக மக்கள் பீதியடைய வேண்டாம்.

நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு கூட்டத்தில் திங்கள்கிழமை குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி உரையாற்றுகிறார். அதன் பிறகு, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க எம்.பி.க்கள், பா.ஜ.க மாநிலத்தலைவர் பிரஹலாத்ஜோஷி தலைமையில் பிரதமர் நரேந்திரமோதியை சந்தித்து காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் நலன்காக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

காவிரி நதிநீர்பங்கீட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடுநிலையோடும், நேர்மையோடும், சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டும், குடியரசு தலைவர் முன்னிலையில் அளித்த சத்திய பிரமாணத்திற்கு பாத்திரமாக, சாதி, மதம், இனம், மொழி பேதமின்றி, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் அமைச்சராக செயல்பட வேண்டிய ஒருவர்,

இந்தியாவின் இறையாண்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்திலும், உண்மைக்கு புறம்பாக பகிரங்கமாக செய்தியாளர்களிடம் பேசியிருப்பது, இந்தியாவின் ஒட்டு மொத்த அதிகாரமும், இவர் கையில்தான் இருக்கிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி என்ன பதில் சொல்ல போகிறார்?

-டாக்டர்.துரைபெஞ்சமின்.