பாகிஸ்தான், கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் நேற்று (08.06.2014) இரவு போலி அடையாள அட்டை காட்டி உள்ளே புகுந்த 15 தீவிரவாதிகள் அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். மேலும் கையெறி குண்டுகளையும் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு விமான நிலையத்தை மீட்டனர்.
சண்டையின் போது, விமான நிலையத்திற்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டன. விமான நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தங்கவைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 10 தீவிரவாதிகள் பலியாயினர். வெடிமருந்து மற்றும் ராக்கெட் மற்றும் ஆர்.பி.ஜி வகை வெடிபொருட்களும் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
விமான நிலையம், இன்று (09.06.2014) மதியம் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் விமான பாதுகாப்பு படையிடம், அதன் நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீஸ் மற்றும் விமான பாதுகாப்பு படையுடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டை முடிவடைந்ததாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதி சரி செய்யப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.
-எஸ்.சதீஸ்சர்மா.