லட்சக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கச்சத்தீவை விரைந்து மீட்க வேண்டும் : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

jayalalithapr190614_3131 copy pr190614_3132 copyபிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (19.06.2014) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

தமிழ் நாட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க 11 படகுகளில் சென்ற 46 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்டுள்ளது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர நான் மீண்டும் மிகுந்த வேதனையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 6 படகுகளில் கடந்த 18–ந்தேதி மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதே 18.06.2014 தினத்தன்று இரவு மற்றொரு சம்பவத்தில் ராமேசுவரத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை 5 படகுகளுடன் சிறை பிடித்து தலை மன்னார் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளது. மேலும், ஒரு எந்திரப் படகு இலங்கை கடற்படையால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த எந்திர மீன்பிடி படகு கடலுக்குள் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதற்கு முன்பு நடந்த 2 சம்பவங்களில் தமிழக மீனவர்கள் சிறை பிடித்து கடத்தி செல்லப்பட்டது பற்றி நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். உடனே, நீங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிங்கள படையால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுத்தீர்கள். உங்களது இந்த துரித நடவடிக்கையை தமிழ் நாட்டின் அனைத்து சமுதாய மக்களும் பாராட்டினார்கள்.

தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக அவர்களது படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படை ஒப்படைக்க வில்லை. இதனால் அந்த மீனவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

நீண்ட நாட்களாக அந்த படகுகள், கருவிகளை திருப்பி கொடுக்காமல் இருந்தால் அவை மீண்டும் பயன்படுத்த முடியாத படி பாழ்பட்டு விடும். இது ஏழை மீனவர்கள் வாழ்வில் மிகப் பெரிய நிரந்தரமான இழப்பை ஏற்படுத்தி விடும்.

எனவே, தமிழக மீனவர்களின் படகுகளையும், அவர்களது மீன்பிடி கருவிகளையும் விரைவில் திரும்பப் பெறுவது மிகவும் அவசியமாகும்.

ஜூன் மாதம் 04–ந்தேதி எனக்கு நீங்கள் எழுதியிருந்த கடிதத்தில் மீனவர்கள் மீட்புக்கு நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூற இருந்தீர்கள். அதை ஏற்று, நல்லெண்ண அடிப்படையில் தமிழக சிறைகளில் இருந்த சிங்கள மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் தமிழ் நாட்டின் அப்பாவி, ஏழை மீனவர்களை, அவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க விடாமல் இடையூறு செய்து வருகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் மன குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்தியா–இலங்கை இடையிலான சட்ட விரோத ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று எனது தலைமையிலான அரசு உறுதியாக நம்புகிறது. இதன் மூலம் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை விரைவில் திரும்ப பெறப்பட வேண்டும்.

இது தொடர்பாக நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தமிழக அரசும் அந்த வழக்கில் தன்னை இணைத்து கொண்டுள்ளது.

1974 மற்றும் 1976–ம் ஆண்டு இந்தியா–இலங்கை ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாகும். கச்சத்தீவு என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதே எங்களது நிலைப்பாடு.

லட்சக்கணக்கான இந்திய மீனவர்களின் நலன் மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கச்சத்தீவை விரைந்து மீட்க வேண்டியது அவசியமாகும்.

தமிழக மீனவர்கள் நிம்மதியாக தங்கள் தொழிலை செய்ய நாங்கள் பல்வேறு மாற்று ஏற்பாடுகள், மானிய உதவிகள் அளித்துள்ளோம். புதிய இடங்களில் மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளோம். கடந்த 03.06.2014 அன்று இது தொடர்பாக நான் உங்களை சந்தித்த போது மனு கொடுத்துள்ளேன்.

இதுவரை இரு நாடுகளின் மீனவர்களிடையே நடந்துள்ள பேச்சுவார்த்தைகள் பயன் உள்ளதாக இருந்துள்ளன. சென்னையில் 27.01.2014 அன்று நடந்த முத்தரப்பு பேச்சு நல்ல பலன் தந்தது.

ஆனால், கொழும்பு பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து பேச உள்ளோம்.

ஜூன் 04–ந்தேதி நீங்கள் எழுதிய பதில் கடிதம் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன் பிடிப்பதை விரைவில் உறுதிபடுத்த வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையால் சிறை பிடித்து செல்லப்பட்டுள்ள 46 தமிழக மீனவர்களை உடனே விரைந்து விடுவிக்க தாங்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர அவர்களது 34 படகுகளையும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

-ஆர்.பிரியதர்ஷிணி.