பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (20.06.2014) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 10.3.2014 மற்றும் 27.5.2014 தினங்களில் இரண்டு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றும் இந்தியை மேலே அல்லது முதலில் எழுத வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியை கட்டாயமாகவும் ஆங்கிலத்தை விருப்பமாகவும் பயன் படுத்தும் வகையில் கூறப்பட்டுள்ளது.
ஆட்சி மொழிகள் விதிகள் 1976–ன் படி மத்திய அரசு அலுவலகத்தில் இருந்து மாநில அரசுக்கு அல்லது யூனியன் பிரதேசத்துக்கு அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் என்று இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆட்சி மொழிகள் சட்டம் 1963 பிரிவு 3 (1)–ல் 1968–ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் மூலம் இந்த விதி அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி மத்திய–மாநில அரசுகளுக்கு இடையிலான தகவல் தொடர்புக்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாக்கப்பட்டுள்ளது. அது இந்தியை அலுவலக ஆட்சி மொழியாக கடைபிடிக்கவில்லை, சொல்லவில்லை.
இந்த நிலையில் மத்திய உள்துறையின் அறிவிக்கை, ‘‘மண்டலம் ஏ’’ பிரிவில் வரும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. சமூக வலைத் தளங்களை அவர்கள் இயற்கையாக பயன்படுத்துவதால் அது அவர்களுக்கு பொருந்தும்.
ஆனால் ‘‘மண்டலம் சி’’ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசின் தகவல் தொடர்பை எளிதில் அணுக முடியாது. ‘‘மண்டலம் சி’’ பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தகவல் தொடர்புக்கு ஆங்கில மொழியே தேவை. ஆங்கிலத்தில் இல்லாவிட்டால் அவர்களால் பொது தகவல் செய்திகளை அணுக முடியாது.
எனவே, மத்திய உள்துறையின் இந்த நடவடிக்கை அலுவலக ஆட்சி மொழிகள் சட்டம்–1963–க்கு எதிராக உள்ளது.
இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழக மக்கள் தங்கள் தாய்மொழியான தமிழ் மொழியை மிகவும் பெருமையாக கருதுபவர்கள்.
தமிழ்நாட்டில் மத்திய உள்துறையின் உத்தரவு, தமிழக மக்களுக்கு கலக்கத்தையும், அமைதியின்மையையும் ஏற்பட காரணமாகி விடும். எனவே சமூக வலைத் தளங்களில் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
அதற்கு ஏற்ப உரிய மாற்றங்கள் செய்ய தாங்கள் தகுந்த அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 03.06.2014 அன்று நான் உங்களை சந்தித்த போது கொடுத்த மனுவில், தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ் நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கை பற்றி குறிப்பிட்டிருந்தேன். மேலும், இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் ஆட்சி மொழியாக்கி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
எனது இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், சமூக வலைத் தளங்களில் உள்ள அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை உற்சாகப்படுத்துவதாக இருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதி உள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.