சேலம் மெய்யனூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 43, மற்றும் அவரது நண்பர் சிவா வயது 49 ஆகிய இருவரும் ஏற்காடு மலைக்கு சுற்றுலா வந்தனர். ஏற்காடு மலைப் பகுதியை சுற்றி பார்த்துவிட்டு, இன்று (20.06.2014) மாலை 4.00 மணியளவில் ஏற்காடு மலைப்பாதை வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சேலத்திலிருந்து இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு வந்த பிக் அப் வாகனத்தின் மீது, பைக் பயங்கரமாக மோதியது. இதில் பைக் மூன்று முறை பல்டி அடித்து விபத்துகுள்ளானதில் பைக்கை ஓட்டி வந்த ஜெயகுமார் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த சிவா என்பவர் கால் முறிந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து ஏற்காடு 20-வது கொண்டை ஊசி வளைவிற்கு அருகில் நடைபெற்றது. இது குறித்து ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஏற்காடு பகுதியிலிருந்து சேலம் செல்லும் வழியில் காவல் நிலைய சோதனைச் சாவடி அமைத்து வாகன தணிக்கை செய்தால், குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை கண்காணிப்பதன் மூலம் இது போன்ற விபத்துகளை தடுக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
-ஏற்காட்டிலிருந்து நவீன்குமார்.