பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (24.06.2014) ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதை பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் 3 எந்திர படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு (23–ந்தேதி) அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே கடந்த 19–ந்தேதி நாகை மீனவர்கள் 7 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
நான் கடந்த 18–ந்தேதி நடந்த இதே போன்ற சிறை பிடிப்பு பற்றி உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதில் 11 படகுகளில் மீன் பிடிக்க சென்றிருந்த 46 மீனவர்கள் கடத்தப்பட்டு விடுவிக்கப்படாததை பற்றி எழுதி இருந்தேன்.
இந்த நிலையில் இதற்கு முன்பு 2 சிறை பிடிப்பு சம்பவங்கள் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகள் திருப்பி கொடுக்கப்படவில்லை.
படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளை நீண்ட நாட்களாக அப்படியே வைத்திருந்தால் அவை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு பயனற்று போய் விடும். இது ஏழை மீனவர்களுக்கு நிரந்தர இழப்பாக மாறி விடும். எனவே, தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப பெறுவது முக்கியமானதாகும்.
கடந்த 19–ந்தேதி நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான சூழ்நிலை உருவாக்குவதாக உறுதிமொழி அளித்து இருந்தேன். என்றாலும், கட்சத்தீவை மீட்பது ஒன்றுதான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று எனது முந்தைய கடிதங்களில் கூறி உள்ளேன்.
இந்தியா – இலங்கை இடையேயான 1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட சட்டத்துக்கு எதிரான ஒப்பந்தங்களை ரத்து செய்து தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பாக்ஜலசந்தியில் மீன் பிடிக்க செல்லும் நம் மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மத்திய அரசு இலங்கையிடம் தொடர்பு கொண்டு அப்பாவி தமிழக மீனவர்களை தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளை திறமையாக மேற்கொள்ள வேண்டும். மேலும், இலங்கையில் உள்ள 64 இந்திய மீனவர்களையும் உடனடியாக மீட்க தூதரக மட்டத்தில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழக மீனவர்களின் 38 படகுகளையும் திரும்ப பெற்று தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறி உள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.