தற்போது இலங்கையின் கலாச்சாரம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வரும் டக்ளஸ் தேவானந்தா கொலை, கொலை முயற்சி மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளில் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருகிறார் என்று தெரிந்தும், இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் கடந்த 28 ஆண்டுகளாக மிகப்பெரிய நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அதைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.
நவம்பர் 1, 1986 அன்று சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். டக்ளஸ் தேவானந்தா உட்பட ஒன்பது பேர் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு ஏ.கே.47, மற்றும் ஆயுதகுண்டுகள், வெடிபொருட்கள் முதலியன கைப்பற்றப்பட்டன.
நவம்பர் 1988-ல் மறுபடியும் டக்ளஸ் தேவானந்தா முதலிய 25 பேர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு பத்து வயது சிறுவனைக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டியக் குற்றங்களுக்கு கைது செய்யப்பட்டனர்.
இது தவிர, 1990-ல் டக்ளஸ் தேவானந்தா அவரது நண்பர்களுடன் வந்து, தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, தங்களது இயக்கத்தில் சேருமாறு வற்புறுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாக தேவானந்தா மீது வளவன் என்பவர் கொடுத்த மற்றொரு வழக்கும் உள்ளது.
ஆனால், இப்படி பல குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட பிறகும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டப் பிறகும், எப்படி அவர்கள் இந்தியாவை விட்டு வெளியே சென்றனர்?
1990-ஆம் ஆண்டு மே மாதம் 31- ந் தேதி இலங்கையிலிருந்து இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக் கொண்டிருந்த போது, டக்ளஸ் தேவானந்தா தமிழகத்தில் இருந்து தலைமறைவாகி திருட்டுத்தனமாக இலங்கைக்கு தப்பித்து சென்றார்.
1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 -ந்தேதி முதல், 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி வரை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களின் போதும் இந்தியா வந்து பல்வேறு அரசியல் தலைவர்களை உத்தியோகப் பூர்வமாகவே சந்தித்து வந்திருக்கிறார். அதே போல இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் டக்ளஸ் தேவானந்தாவை பலமுறை சந்தித்து உள்ளார்கள்.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை நீதிபதி உத்தரவு இல்லாமல், பிடிவாரண்டு இல்லாமல் பார்த்த உடனேயே கைது செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளது.
அப்படி இருந்தும், தேடப்படும் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தாவை பல முறை இந்தியாவிற்கு வரவழைத்து விருந்து அளித்து உபசரித்து, அரசு மரியாதையுடன் பத்திரமாக வழியனுப்பி வைத்துள்ளனர் நமது இந்திய ஆட்சியாளர்கள். இது போன்ற ஒரு கொடுமை உலகத்தில் எந்த நாட்டிலும் நடந்திருக்காது.
இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்று அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று அப்பொழுது இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் 13-06-2010 அன்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள மு. கருணாநிதி வீட்டிற்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார், அப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய் என்கிற ஒரே காரணத்துக்காக, அவர் சிகிச்சைக்கு வருவதற்கு விசா தரப்படுவதில் தயக்கம் காட்டிய இந்திய அரசு, இந்திய நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை மட்டும் எப்படி அனுமதித்தது?
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தபோது இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தில் இலங்கையும், இந்தியாவும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்வது, கிரிமினல் விஷயங்களில் சட்டரீதியான உதவிகளை ஒருவருக்கொருவர் செய்து கொள்வது போன்ற ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷயுடன் வந்த குழுவில் அவரது அமைச்சரவை சகாவும் இந்திய நீதிமன்றங்களால் தேடப்பட்டு வரும் குற்றவாளியுமான டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு அன்று தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, மத்திய அரசின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், மத்திய அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தியதோடு, காங்கிரஸ் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளும் வரை, சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்தார். சட்டம் தன் கடமையை செய்யுமென்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி வந்த இந்திய ஆட்சியாளர்களின் இலட்சணம் இதுதானா? இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
E.Mail: drduraibenjamin@yahoo.in