தமிழக மக்களுக்குத் தேவையான மருந்துகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, தமிழக அரசின் சார்பில் “அம்மா மருந்தகங்கள்” தொடங்கப்படும் என்று, கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதில், “ஏற்கனவே கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதிதாகத் தொடங்கப்படும் என்றும், இதற்கென ரூ.20 கோடி செலவிடப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் மருந்தகங்களில் ஆங்கில மருந்துகள் ஏற்கனவே விற்பனை வரி நீங்கலாக விற்பனை செய்யப்படுகின்றன. அதுபோல் அம்மா மருந்தகங்கள் மூலம் விற்கப்படும் மருந்துகளுக்கு 10 சதவீத விலை தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது.
சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள கூட்டுறவு அங்காடி உள்பட தமிழகம் முழுவதும் 10 இடங்களில் அம்மா மருந்தகத்தை முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் 26.06.2014 அன்று திறந்து வைத்தார்.
முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் ரூ.1 கோடி செலவில் 10 அம்மா மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டன.
அம்மா மருந்தகம் திறக்கப்பட்ட சில வினாடிகளிலேயே ஏராளமான பொதுமக்கள் அம்மா மருந்தகத்திற்கு வந்து மருந்துகளை வாங்கிச் சென்றனர். 10 சதவீத தள்ளுபடியுடன் தரமான மருந்துகள் வழங்கப்பட்டதால் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்த அம்மா மருந்தகங்கள், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், மார்க்கெட் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளை சிறப்பாக பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணி புரியும் கணினி பயிற்சி பெற்ற விற்பனையாளர்களோடு, வெளிக்கொணர்வு முறை மூலம் மருந்தாளுநர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
-ஆர்.பிரியதர்ஷிணி.