இலங்கையில் இஸ்லாமியர்களுக்கும், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மதக்கலவரம் கொழுந்து விட்டு எரியும் இச்சூழலில், அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், திட்டமிட்டப்படியே மாலைதீவு அரசு முறைப் பயணத்தை, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு இருக்கிறார்.
இந்தப் பயணத்தின் போது மாலைதீவு உதவி ஜனாதிபதி டாக்டர் முகமது ஜமீல் அஹ்மத், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மைமூன், மாலைதீவு தேசிய பாதுகாப்பு அமைச்சர் கேணல் முகமது நாசிம் ஆகியோரை குரும்பா தீவில் சந்தித்து, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடினார்.
மாலைதீவு அரசாங்கத்தின் பாதுகாப்புச் சேவைகளை மேம்படுத்த இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் மாலைதீவு படையினருக்குப் பயிற்சிகள் வழங்கவும், கருத்தரங்குகள் நடத்தவும் இலங்கை அரசாங்கம் உதவ வேண்டும் எனவும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கேணல் முகமது நாசிம், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷயிடம் கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி அளித்துள்ளார்.
-ஆர்.மார்ஷல்.