அரசு முறைப் பயணமாக இன்று (04.07.2014) சென்னை வந்த சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம், தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, தமிழகத்திற்கும், சிங்கப்பூருக்கும் இடையே பழங்காலமாக நிலவி வரும் வரலாற்று சிறப்புமிக்க நல்லுறவு மற்றும் இருநாடுகளைச் சேர்ந்த மொழி மற்றும் கலாச்சார முறைகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வதையும் சுட்டிகாட்டினார்.
மேலும், சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு இடையேயான பொருளாதார தொடர்பு, முழுமையான குறிக்கோளை இன்னும் எட்டவில்லை என்றும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டுகளைப் ஈர்ப்பதில் தமிழகம் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், உலகின் பல்வேறு பகுதியில் உள்ள நாடுகள் முதல், கிழக்கு ஆசியா, குறிப்பாக கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தமிழகத்தை தேர்வு செய்து முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழக அரசின் தொலைநோக்கு திட்டம் 2023-ல் குறிப்பிட்டுள்ள இலக்குகளை முழுமையாக எட்டுவதற்கு சிங்கப்பூரில் இருந்து அதிகளவு முதலீட்டை எதிர்பார்ப்பதாகவும், சென்னையைப் போல, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தொழிற்பூங்காக்கள் அமைக்கவும், மதுரை – தூத்துக்குடி தொழிற்சாலை மைய திட்டம், துறைமுகங்கள், கடலோர மாவட்டங்களில் வளர்ச்சி, நகர மேம்பாடு, போக்குவரத்து, கழிவுநீர் நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுலாவை உள்ளடக்கிய திட்டங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதற்கு சிங்கப்பூரின் ஆதரவும், இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு சிங்கப்பூரின் ஆலோசனைகளையும், தமிழகம் எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமான 2023 இலக்கை முழுமையாக எட்ட சிங்கப்பூர் முக்கிய பங்குதாரராக விளங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
அப்போது பேசிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க., பெற்ற மகத்தான வெற்றிக்கு, சிங்கப்பூர் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் தனிப்பட்ட முறையில் தெரிவித்த பாராட்டுக்களை முதலமைச்சருக்கு தெரிவித்ததுடன், தமிழகத்தில் முதலீடு செய்வதில் முன்னிலையில் உள்ள மூன்று நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று, பொருளாதார முன்னேற்றத்திற்கு சிங்கப்பூரும், தமிழகமும் இணைந்து ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, சிங்கப்பூருக்கு வருகை தரவேண்டும் என, சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் அழைப்பு விடுத்தார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.