கொழும்பு துறைமுகத்தில், சீனாவுக்கு 35 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதியில் எலக்ட்ரோ மெக்னடிக் பிளஸ் ஆயுதங்கள் மற்றும் அந்த ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நிலையம் இருக்கலாம் என கொழும்பு துறைமுகத்தின் பொறியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள சீ.ஐ.சீ. என்ற சர்வதேச கொள்கலன் முனையத்தில் இரகசியமான பகுதியில் இந்த நிலையம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் சீ.ஐ.சீ. முனையத்தை நிர்மாணிக்க 500 மில்லியன் டாலர்களுக்கு மேல் சீனா முதலீடு செய்துள்ளது. இதில் இலங்கைக்கு 15 வீதமான உரிமை மட்டுமே உள்ளது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, இந்த முனையத்தை திறந்து வைத்த போதிலும், இப்பகுதியில் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றவோ, தேசிய கீதத்தை இசைக்கவோ சீனா அனுமதிக்கவில்லை.
35 வருடங்களுக்கு இந்த முனையத்தின் உரிமை சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அது சீனாவுக்கு சொந்தமான பகுதியாகவே கருதப்படுகிறது.
இந்த சீ.ஐ.சீ. முனையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரகசியமான நிலையத்திற்குள் இலங்கையின் பொறியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. இலங்கை கடற்படையினர் கூட அதற்குள் பிரவேசிக்க முடியாது.
சீனாவின் இந்த இரகசிய நிலையத்தில் எலக்ட்ரோ மெக்னடிக் பிளஸ் ஆயுதம் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது அதற்கான கட்டுப்பாட்டு அறையாக இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது.
எலக்ட்ரோ மெக்னடிக் பிளஸ் ஆயுதம் என்பது எதிர்காலத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்போகும் அதிநவீன தொழிற்நுட்ப ஆயுதமாகும்.
அணு குண்டு அல்லது அணு ஆயுதங்கள் போன்ற வெளி மேற்பரப்பில் சேதங்களை ஏற்படுத்தாத வகையில், உட்பரப்பிற்குள் எலக்ட்ரோ மெக்னடிக் அலைவரிசைகள் மூலம் பயங்கரச் சேதங்களை விளைவிக்க முடியும். இந்த ஆயுதம் ஒரு அடி நீளத்திற்கும் குறைவாக இருந்தாலும் மிகப் பெரிய சேதங்களை ஏற்படுத்தக் கூடியவை என நம்பபடுகிறது.
இந்த ஆயுதங்கள் மூலம் பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்த முடியும். ஒரு பிரதேசத்திற்குள் பயணிக்கும் கப்பல்கள், விமானங்கள் மற்றும் வாகனங்களை உடனடியாக செயலிழக்க செய்ய முடியும்.
அத்துடன் மின்சாரம், தொலைக்காட்சி, தொலைப்பேசி, கணனி, குளிர்சாதனப் பெட்டி என நவீன தொழிற்நுட்ப சாதனங்கள் அனைத்தையும் செயலிழக்க செய்ய முடியும் என கூறப்படுகிறது. இந்த நவீன ஆயுதம் மூலம் ஒரு பிரதேசத்தை ஒரு விநாடிக்குள் கற்காலத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் தெரியவருகிறது.
மக்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றை கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர்களை பயன்படுத்தாமலேயே இரண்டு நொடிகளில் அலைவரிசை மூலம் மனிதர்களில் உடலில் தீ போன்ற உஷ்ணத்தை பரப்ப முடியும்.
இந்த தாக்குதல் மூலம் மனிதர்களின் உடல் உறுப்புகளுக்கு எந்த சேதமும் ஏற்படாமல், அவர்களை திக்குமுக்காட செய்து கலைக்க முடியும்.
சீனா 2012 ஆம் ஆண்டு இந்த எலக்ட்ரோ மெக்னடிக் பிளஸ் ஆயுதத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது.
இந்த ஆயுதம் மூலம் இந்து மகா சமுத்திரத்தில் இருக்கும் அமெரிக்காவின் விமானங்களை தாங்கி செல்லும் கப்பல்கள் மீதும் சில விநாடிகளில் தாக்குதல் நடத்த முடியும்.
அமெரிக்காவிடமும் இந்த தொழிற்நுட்பம் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விசயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-யு.டி.எல்.டீம்.