ஏற்காடு தாலுக்காவில் உள்ள காக்கம்பாடி எனும் மிகச் சிறிய மலைக் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 27 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி உயர் தரம் வாய்ந்த முன்மாதிரி அரசு பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுவர் முழுவதும் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் வாசகங்களும், திருக்குறள் மற்றும் சமூக சிந்தனைகளும், தேசிய கவிஞன் மகாகவி பாரதியார் மற்றும் தேசத்தலைவர்களின் படங்களும், பல வண்ணங்களில் வரையப்பட்டுள்ளது. கழிப்பறையில் கூட மனித உடல் கூறுகள் பற்றிய படம் வரையப்பட்டுள்ளது.
இந்த பள்ளியானது மிகவும் தூய்மையாகவும், மரங்கள் நிறைந்தும், அதிக காற்றோட்டத்துடன் ஒரு தவக்கூடம் போல் காட்சியளிக்கிறது.
இந்த பள்ளியின் தலைமையாசிரியர் பால்ராஜ் மாணவர்களுக்கு பாடங்களை வித்தியாசமான முறையில் கற்பிக்கிறார். பாடத்திலுள்ள செய்யுள் மற்றும் ஆங்கில கவிதைகளையும் பாடல் வடிவில் கற்றுக் கொடுக்கிறார். இதற்கென தனது சொந்த செலவில் ஹார்மோணியமும், கீபோர்டும் வாங்கி பயன் படுத்துகிறார். மாணவர்களுக்கு இசையும் கற்று கொடுக்கிறார்.
இந்த முறையில் பாடம் எளிதாக மனதில் பதிவதாக அந்த பள்ளி குழந்தைகள் கூறுகிறார்கள். இந்த பள்ளியில் யூ.பி.எஸ். வசதியும் ஏற்படுத்தியுள்ளார். இதனால் மின்தடை பிரச்சனையும் இல்லை.
இதில் மற்றொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் மகனும் இந்த பள்ளியில்தான் படிக்கிறார்.
இந்த கிராமம் மற்றும் இதை சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள மாணவர்களுக்கு இந்த பள்ளியானது ஒரு வரப்பிரசாதமாகவே திகழ்வதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
காக்கம்பாடி கிராமத்திற்கு மனு நீதி முகாமிற்கு வந்த சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், இந்தப் பள்ளியின் சுற்று சுவரையும், அதிலுள்ள வாசகங்களையும் கண்டு பள்ளியை பார்வையிட்டார். குழந்தைகளின் திறனையும் ஆய்வு செய்து, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ்க்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்.
‘எழுத்து அறிவித்தவன் இறைவனாகும்’ என்ற வார்த்தை இந்த ஆசிரியருக்கு அப்படியே பொருந்துகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு அரசு பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும், அப்படிப்பட்டவர்களுக்கு தான் அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவை அரசு நடைமுறைப்படுத்தினால் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சொர்க்கலோகமாக மாறிவிடும்.
தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி வியாபாரிகள் அனைவரும், தங்கள் கல்விக் கடைகளை தானாகவே மூடிவிடுவார்கள்.
-நவீன் குமார்.