பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று (12.07.2014) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
டெல்லியில் கடந்த 3–6–2014 அன்று நான் உங்களை சந்தித்து பேசிய போது தமிழ்நாட்டின் தேவைக்குரிய அம்சங்கள் கொண்ட ஒரு மனுவை அளித்தேன். அந்த மனுவில், தமிழ்நாட்டுக்கு மாதம் ஒன்றுக்கு தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்எண்ணையை முழுமையாக வழங்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்க ஒவ்வொரு மாதமும் 65,140 கிலோ லிட்டர் மண்எண்ணை தேவைப்படுகிறது. ஆனால், இதை கருத்தில் கொள்ளாமல் கடந்த கால ஆட்சியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் 2010–ம் ஆண்டு மார்ச் வரை மாதம் தோறும் தலா 59,780 கிலோ லிட்டர் மண் எண்ணையையே ஒதுக்கீடு செய்தது.
அதன் பிறகு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய மாத ஒதுக்கீடு மண்எண்ணை அளவை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, கொஞ்சம், கொஞ்சமாக 10 தடவை குறைத்து விட்டது.
தற்போது தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் 29,056 கிலோ லிட்டர் மண்எண்ணையைத்தான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இது தமிழ்நாட்டின் மண்எண்ணை தேவையில் 45 சதவீதத்தையே பூர்த்தி செய்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள சமையல் கியாஸ் இணைப்புகளின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரத்தை அடிப்படையாகக் கொண்டே, மண்எண்ணை ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் இந்த புள்ளி விபர சேகரிப்பில் பல குறைபாடுகள் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பற்றிய தகவல்களை, இந்திய எண்ணை நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள தயங்குகின்றன. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்துக்கும், மாநில குடும்ப அட்டை பற்றிய புள்ளி விபரத்துக்கும் இடையில் 56.16 லட்சம் இணைப்புகளில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
மேலும், புள்ளி விபர கணக்குப்படி நாடெங்கும் சமையல் கியாஸ் இணைப்பு உயர்ந்தபடி உள்ளது. ஆனால், அப்படி உயரும் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லா மாநிலங்களிலும் மண்எண்ணை ஒதுக்கீடு அளவு குறைக்கப்படவில்லை.
தமிழ்நாட்டுக்கு குறைக்கப்பட்ட அளவு மாதிரி மற்ற மாநிலங்களில் மண் எண்ணை ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
தமிழ்நாட்டுக்கு முந்தைய ஆட்சியால் இழைக்கப்பட்ட இத்தகைய நியாயமற்ற மண்எண்ணை ஒதுக்கீடு அளவு குறைப்பு திரும்பப் பெறப்படும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், தமிழ்நாட்டுக்கு இந்த ஜூலை மாதமும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தரப்பட்டது போன்றே அதே 29,056 கிலோ லிட்டர் மண்எண்ணையையே வழங்கி இருக்கிறது. இதை அறிந்ததும் நான் ஏமாற்றம் அடைந்தேன்.
கடந்த ஆட்சி நடைமுறையை, மத்திய அரசு அதிகாரிகள் அப்படியே கடை பிடித்திருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். தமிழ்நாட்டுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மண்எண்ணை ஒதுக்கீட்டில் இந்த நியாயமற்ற போக்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மண்எண்ணை தேவை அளவு 55 சதவீதம் அதிகரித்து விட்டது. இந்த நிலையில் மத்திய அரசும் மண்எண்ணை ஒதுக்கீட்டு அளவை குறைத்து விட்டதால் தமிழக மக்கள் குறிப்பாக கிராமப்பகுதிகளில் வாழும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட இந்த செயலால், கிராமப் பகுதி ஏழை – எளிய மக்கள் சமையல் செய்வதற்கு மரங்களையே பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தமிழ்நாட்டில் கடும் சுற்றுச் சூழல் மாசை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டுக்கு செய்யப்பட்ட இந்த நியாய மற்ற நிலை நீடிப்பதை உங்கள் அரசு இனியும் அனுமதிக்காது என்று நம்புகிறேன். எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் தர வேண்டிய மண்எண்ணை ஒதுக்கீடு அளவான 65,140 கிலோ லிட்டர் மண்எண்ணை முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.