சேலம் மாவட்டம், ஏற்காட்டில் Our Lady Of Velankanni என்ற பெயரில் ஒரு உயர் நிலை பள்ளி கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதி ஏதுமின்றி செயல்பட்டு வருகிறது. கட்டிடமானது சிறிய அடுக்கு மாடி குடியிருப்பு போல காட்சியளிக்கிறது.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லை. இந்த பள்ளியின் வாசல்படியும் சாலை ஓரத்திலேயே உள்ளது. இந்த வழியாக பேருந்துகள் சென்று வருவதால் பள்ளி குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
பள்ளியில் மாணவர்கள் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட கூட இட வசதி இல்லாமல், மாணவர்கள் பள்ளிக்கு வெளியே உள்ள சாலை ஓரத்தில் அமர்ந்துதான் சாப்பிடுகின்றனர்.
பள்ளிக்கு தேவைப்படும் முக்கிய அம்சமான விளையாட்டு மைதாதனம் பள்ளிக்கு அருகில் இல்லை. இந்த பள்ளிக்கான விளையாட்டு மைதானம் பள்ளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போட்டுக்காடு கிராமத்தில் உள்ளது.
மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறைதான் உடற்கல்வி பயிற்சி எனக் கூறி மாணவர்களை 3 கிலோ மீட்டர் நடக்க வைத்து மைதானத்திற்கு அழைத்து சென்று பயிற்சி அளித்து விட்டு மீண்டும் நடக்க வைத்தே பள்ளிக்கு அழைத்து வரும் கொடுமையும் நடக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இந்த பள்ளியின் தரத்தையும், உள்கட்டமைப்பு வசதியையும் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
–நவீன் குமார்.