சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் 21-ந் தேதி (நேற்று) சந்தித்தார். அவரை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வரவேற்றார்.
இந்தியாவில் உலக வங்கியின் நிதி உதவி பெறப்பட்ட திட்டங்களில், பெரிய அளவிலும் வெற்றிகரமாகவும் திட்டங்களை நிறைவேற்றிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று ஜிம் யாங் கிம்மிடம் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தெரிவித்தார்.
புதிய யுக்திகளை வரவேற்பது, திட்டங்களை நிறைவேற்றுவதில் சிறப்பான செயல்பாடு போன்றவற்றால், வெளி முகமைகளின் நிதியுதவிகளை பெறும் சிறந்த இடமாக தமிழகம் தொடர்ந்து விளங்குகிறது. இந்த வங்கியுடன் தமிழகம் கொண்டுள்ள இணைப்பு, இரு தரப்புக்கும் நன்மைகளை அளிக்கிறது.
வேளாண்மை நவீன மயமாக்கல், நீர்நிலை புனரமைப்பு மற்றும் மேலாண்மை திட்டம் (ஐயம்வாம்) மற்றும் புதுவாழ்வு திட்டம் போன்ற ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முன்னோடித் திட்டங்களை உலக வங்கியின் உதவியுடன் சிறப்பாக செயல்படுத்தியதை முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பெருமையுடன் குறிப்பிட்டார்.
2004-ம் ஆண்டில் இந்துமகா சமுத்திரத்தின் சுனாமி பேரலைகளால் ஏற்பட்ட பேரழிவின்போது தமிழகத்துக்கு உலக வங்கி செய்த உதவிகளை முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவு கூர்ந்தார்.
உலக வங்கியின் உதவியால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம், தமிழ்நாடு சாலைகள் பகுதித் திட்டம் முதல் பாகம், தமிழ்நாடு சுகாதார திட்டம் போன்றவை தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன.
பொதுசுகாதார விஷயத்தில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதை குறிப்பிட்ட முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இதில் வளர்ந்த நாடுகளைப் போன்ற உச்சநிலையை அடைவதை உறுதி செய்வதற்காக அரசு பாடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அணைகள் சீரமைப்பு, மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு கடற்பகுதி பேரிடர் அபாய குறைப்புத் திட்டம் ஆகிய புதிய திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. எந்த நோக்கத்தில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டதோ, அதை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அவை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உறுதி அளித்தார்.
தமிழகத்தை மென்மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்ற திட்டத்தை முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். தமிழகத்தை முன்னேற்றும் உட்கட்டமைப்புகள் மீது முதலீட்டுகளை வரவேற்க வேண்டும் என்பதும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதன் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதும்தான் அதன் நோக்கம்.
தமிழ்நாடு சாலைப் பிரிவு திட்டத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், விரைவில் அந்தத் திட்டம் மதிப்பிடப்படும் என்று ஜிம் யாங் கிம்மிடம் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் பொது மற்றும் தனியார் பங்களிப்பை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் முதலீடு அதிக அளவில் அனுமதிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு வங்கியின் நிதியளிப்பு, ஆயிரத்து 620 கோடி ரூபாய் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தில் தமிழக அரசின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, வங்கியின் நிதியளிப்பை ரூ.2,700 கோடியாக அதிகரித்துத் தரவேண்டும் என்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
வேளாண்மை நவீன மயமாக்கல், நீர்நிலை புனரமைப்பு மற்றும் மேலாண்மை, புதுவாழ்வு ஆகிய திட்டங்களுக்கான தொடர் திட்டங்களும், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 4-ம் பாகமும் திட்டமிடப்பட்டு இருக்கின்றன. இவற்றுக்கும் உலக வங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
தனது முந்தைய ஆட்சியில், உலக வங்கியின் கிளையை நிறுவுவதற்காக சென்னையை தேர்வு செய்தது தனக்கு மிகுந்த பெருமை சேர்த்தது என்று குறிப்பிட்ட முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. மாநகருக்கு அடுத்தபடியாக சென்னையில் நிறுவப்பட்ட அந்த வங்கிக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
உலக வங்கியின் உதவிகளை கவனமுடனும், திறனுடனும் செயல்படுத்தும் என்று தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உறுதி அளித்தார். பொதுசேவையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் வெற்றியுள்ள வாழ்க்கையை அடுத்து, அவருக்கு ஜிம் யாங் கிம் பாராட்டு தெரிவித்தார்.
முதலீடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அதே நேரத்தில் குழந்தை மற்றும் பிரசவ இறப்பு விகிதங்களைப் பற்றிய சமூக விழிப்புணர்வை அதிகரித்து வருகிறது என்றும் ஜிம் யாங் கிம் கூறினார்.
திட்டங்களை அமலாக்குவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் உண்மையிலேயே மிகுந்த சிறப்புக்கு உரியவை என்றும் அவர் கூறினார். மேலும், தொழிலுக்கான நல்ல சூழ்நிலைகளை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிடம் அவர் சில தகவல்களைக் கேட்டார்.
தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் அரசு மிகுந்த கவனம் கொண்டுள்ளது. குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினாலே போதும், மற்ற தேவைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே கொடுக்கப்படுகிறது.
கல்வியில் தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள், மாநிலத்தின் பணித்திறன் உயர்த்தப்படுவதை உறுதி செய்கின்றன. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை இலக்காக வைத்து விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதோடு, வறுமை ஒழிப்புக்காக பல்வேறு திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளது.
இவையெல்லாம் தமிழகத்தில் சமத்துவ நிலையை கொண்டு வந்துள்ளன. அமைதி, பணித்திறன் மற்றும் ஒழுக்கம் போன்றவை, முதலீட்டை மிகவும் அதிகமாக ஈர்க்கும் தளமாக தமிழகத்தை மாற்றியுள்ளன.
இந்தியாவில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி ஜிம் யாங் கிம் கேட்டறிந்தார். தனது தலைமையிலான ஆட்சியின் போது, பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை குறைத்தது பற்றியும், பெண் சிசுக் கொலையை 1992-ம் ஆண்டு கொண்டு வந்த தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைத்ததையும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.
அனைத்து மகளிர் காவல் நிலையங்களை அமைத்ததன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக எதிர்கொள்ளப்பட்டன என்றும் போலீசிடம் புகார்கள் கொடுப்பதற்கு பெண்களுக்கு நம்பிக்கை அதன் மூலம் ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுக்கான உலக வங்கியின் இயக்குனர் ஓனோ ருல், தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் திட்டங்களால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். பல்வேறு திட்டங்களின் தொடர்ச்சியாக வரும் திட்டங்களுக்கான அனுமதி இன்னும் 12 மாதங்களில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் சாலைகள் பகுதி திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவை என்பதை மத்திய நிதித்துறையிடம் எடுத்துச் செல்ல இருப்பதாவும் அவர் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின்போது சர்வதேச நிதிக் கழகத்தின் (ஐ.எப்.சி.) இயக்குனர் செர்ஜ் டீவியக்ஸ், உலக வங்கி இயக்குனர் டி.வி.சோமநாதன், சென்னை மத்திய மேலாளர் சுனில்குமார் மற்றும் தமிழக அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அரசு ஆலோசகர், நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் பேசினார். அப்போது, “முதலமைச்சருடன் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தேன். இந்த சந்திப்பு சிறப்பாக அமைந்திருந்தது. உலக வங்கிக்கு தமிழக அரசு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
தமிழக அரசுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறோம். 22-ந் தேதி (இன்று) புதுவாழ்வுத் திட்டத்துக்கான பணிகளை பார்வையிடச் செல்கிறேன். இந்தத் திட்டம் மூலம் பல்வேறு பணிகள் உருவாக்கப்படும். அதுமட்டுமல்ல திறமைகளையும் வளர்க்க இந்தத் திட்டம் உதவும். எதிர்காலத்திலும் தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்” என்று கூறினார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.