இலங்கை வவுனியாவில் கீற்றுக் கொட்டகையில் பாடசாலை : பள்ளிக் குழந்தைகள் படும்பாடு!

v.karikalikkulam g.t.m school vavuniya1v.karikalikkulam g.t.m school vavuniya இலங்கை வவுனியாவிலிருந்து ஓமந்தை வழியே சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மிகவும் பின்தங்கிய மீள்குடியேற்றப்பட்ட கிராமம் கள்ளிக்குளமாகும்.

இங்கு கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ளது. மூன்று கீற்றுக் கொட்டகையில் 80 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

பலத்தக் காற்று, மழை மற்றும் வெயிலின் தாக்கம் ஆகிய அனைத்து இயற்கைச் சீற்றங்களையும் சகித்துக் கொண்டுதான் இப்பாடசாலையில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது வெப்பக் காற்று வீசுவதால் கொட்டகைகளின் கீற்றுகள் ஒவ்வொன்றாக காற்றில் பறக்கின்றது. பலத்த காற்றின் காரணமாக புழுதி அள்ளி வீசுகின்றது. அத்தனை வேதனைகளையும், சிரமங்களையும் சகித்துக் கொண்டுதான் மாணவ, மாணவிகள் இரண்டாம் பருவத் தேர்வினை எழுதுகின்றனர்.

இலங்கையில் இன்னும் எத்தனையோ பல தமிழ் கிராமங்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, வாழ்விடங்கள் என்று அடிப்படை வசதிகள் இன்றி, அரசியல் பழிவாங்கல் காரணமாக அபிவிருத்திகள் இன்றி காணப்படுகின்றன. தரையிலும் மர நிழல்களுக்கு கீழேயும் அமர்ந்து மாணவ, மாணவிகள் ஆரம்ப கல்வியை கற்கும் அவலம் இன்றும் தொடர்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு வசிப்பதற்கு இடமில்லை, உழைப்பதற்கு நிலமுமில்லை, உண்பதற்கு உணவுமில்லை, படிப்பதற்கு போதிய வசதியுமில்லை, உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு இந்த பாடசாலையும், பள்ளிக் குழந்தைகளுமே சிறந்த உதாரணம்.

-எஸ்.சதிஸ்சர்மா.