போலி போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கைது!

போலி போக்குவரத்து சப்–இன்ஸ்பெக்டர் வினோத்

போலி போக்குவரத்து சப்–இன்ஸ்பெக்டர் வினோத்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் நள்ளிரவு ரோந்து சென்றனர். அங்கு பழனிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்துமிடம் அருகே வாலிபர் ஒருவர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அந்த வாலிபரின் அருகே சென்று போலீசார் கவனித்தனர்.

அப்போது அவர் அணிந்து இருந்த சட்டைக்குள் மற்றொரு சட்டை அணிந்து இருந்தார். அது போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரின் சீருடையாகும். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தூங்கி கொண்டு இருந்த வாலிபரை எழுப்பி விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்.

உடனே அவரை திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஆண்டிமடத்தை சேர்ந்த வினோத்(வயது 24) என்பதும், இவர், ஈரோட்டில் தனது தந்தையுடன் சேர்ந்து செங்கல்சூளையில் கல்அறுக்கும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், போலீஸ் சீருடை அணிந்ததற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் போலீஸ் உடை அணிய வேண்டும் என்று மனதில் நீண்ட நாட்களாக ஆசை இருந்ததால் அணிந்தேன் என்றும் தெரிவித்தார்.

விசாரணையில், 9–ம் வகுப்பு படித்துள்ள வினோத் அவ்வப்போது போலீஸ் சீருடை அணிந்து பஸ்சில் சென்று வருவாராம். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கார் டிரைவராக கோவையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவர் மீது சூலுர் போலீஸ் நிலையத்தில் விபத்து வழக்கு ஒன்று பதிவாகி இருந்ததும், அந்த வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, அரசு ஊழியர் சீருடையை தவறாக பயன்படுத்தியது உள்பட 2 பிரிவுகளின் கீழ் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

-சி.மகேந்திரன்.