பிரதமர் நரேந்திரமோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (26.07.2014) ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல 13 ஆயிரத்து 159 பேர் இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு விண்ணப்பித்திருந்தனர். ஹஜ் பயணத்திற்கு மும்பையில் உள்ள ஹஜ் கமிட்டி தலைமையகம் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டுக்கு 2,672 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 1,180 இடங்கள் முன்பதிவு அடிப்படையிலானது. 1,492 இடங்கள் பொது அடிப்படையிலானது.
கடந்த ஆண்டைவிட 100 இடங்கள் மட்டுமே தற்போது தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏராளமான பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்ல விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு உதவியாக இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு 3,696 பேர் ஹஜ் யாத்திரைக்கு சென்றிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்து இருந்தனர். ஆனால், குறைவான இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் நேரடியாக தலையிட்டு தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்ல காத்திருப்பதை கருத்தில் கொண்டு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், மத்திய வெளி விவகார துறைக்கு இதற்கான சிபாரிசுகளை கூறி அதிக இடங்களை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான பேர் பயனடைவார்கள். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.