அகதிகள் முகாமை இழுத்து மூடும் கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய சிறை முன்பு இன்று (26.07.2014) மதியம் இரண்டரை மணியளவில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மத்திய சிறையின் முன்பு கூடினர். மத்திய அரசை கண்டித்தும், அகதிகள் முகாமை உடனே இழுத்து மூட வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், அனுமதி இன்றி கூடியதால் அவர்கள் அனைவரையும் கைது செய்து கே.கே நகர் பகுதியில் உள்ள மக்கள் மன்றத்தில் வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் சேது.மனோகரன், வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.கண்ணன், இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமரன், நிர்வாகிகள் வீரன், பாலக்கரை ராஜா மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-ஆர்.பி.சங்கர ராமன்.