திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கணேசர் குழுமத்தின் 50-வது ஆண்டு முப்பெரும் விழா 27.07.2014 அன்று நடைபெற்றது. செங்கம் கணேசர் குருப் நிறுவனங்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து 2003-ம் ஆண்டு முதல் இலவச கண்பரிசோதனை முகாமினை பல்வேறு அமைப்புகள் உதவியுடன் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் நடத்தி வருகிறது.
இதன் 100-வது இலவச கண்சிகிச்சை முகாம் மற்றும் நிறைவுவிழா செங்கம் தமிழ்சங்கத்தின் தொடர் விழா என முப்பெரும் விழா கணேசர் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு விவசாய சங்கத்தலைவர் அரட்டவாடி குப்புசாமி தலைமை தாங்கினார். ஓம்சக்தி வார வழிபாட்டுமன்ற தலைவர் வெங்கடாஜலம், வழக்கறிஞர் கஜேந்திரன், பேராசிரியர் வணங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணேசர் குருப் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
விழாவில் சேலம் ருக்மணிஅம்மாள் ‘தமிழும் கம்பனும்’ என்ற தலைப்பில் பேசினார். தமிழில் உள்ள சட்ட நூல் திருக்குறல். சட்டம் ஒவ்வொருவருக்கும் பொதுவானது. ஆனால், எல்லோரும் சட்டத்திற்கு கட்டுபடமாட்டார்கள். அந்த சட்டத்தை விளக்குகிற அறநூல் கம்பராமாயணம். வால்மீகி எழுதிய ராமாயணத்தை தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப எந்த காலத்திற்கும் எந்த கேள்விக்கும் பொறுந்துகிற அளவில் விடைதரும் அளவில் பாடியவர் கம்பன்.
அயோத்தியில் வாழ்க்கைக்கு தேவையான கல்வி. வருந்தி வந்தவரைஉபசரிக்கும் விருந்தோம்பல், ஒழுக்கம் இருந்தது. ஒரு இடத்தில் சொன்ன கருத்தை தொடர்ச்சி விடாமல் பல பாடலுக்கு பிறகும் சுட்டிகாட்டப்படும் சின்ன, சின்ன சந்தேகங்களுக்கு கூட விடை கூறும் அளவில் கம்பர் ராமாயணம் பாடி உள்ளார். கடவுளுக்கும் நியாயம் ஒன்றே தருமத்திற்கு கடவுளும் கட்டுப்படவேண்டும் என்பது இந்து சாத்திரம். அதன் படி வாழ்ந்து காட்டி ராம அவதாரத்தை கம்பன் தமிழ்பண்பாட்டுடன் கலாச்சாரத்துடன் பாடியுள்ளார் என பேராசிரியர் ருக்மணி பேசினார்.
முன்னதாக திருவண்ணாமலை ஸ்ரீநிதி நாட்டியாஞ்சலி உமா ரவிச்சந்திரன் பரத நாட்டியம் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் ராமமுர்த்தி, எம்பெருமானார் சபா நிர்வாகிகள் ராஜசேகரன், நகைகடை சம்பத், மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், நடராஜன், சங்கர வித்யாலயா பள்ளி நிர்வாகி பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-செங்கம் மா.சரவணகுமார்.