இலங்கையின் தலைநகர் கொழும்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி தொடங்கி 20- ம் தேதி வரை மூன்று நாட்கள் இலங்கை இராணுவ கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் இராணுவக் கருத்தரங்கை அந்நாட்டு அரசு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இக்கருத்தரங்கு நிகழ்வில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஒப்புதல் கடிதம் இரு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இராணுவத் தலைமையகத்துக்கும், சில அரசியல் தலைவர்களுக்கும் இலங்கை இராணுவம் அழைப்பு அனுப்பியுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள இராணுவக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு இராணுவம் செய்துள்ளது.
இந்தியாவில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைப்பெற்ற போதும் இதே சுப்பிரமணியன் சுவாமி தான் இலங்கையில் நடைப்பெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றார். இலங்கை இராணுவக் கருத்தரங்கிலும் கலந்து கொண்டு இந்தியாவின் சார்பில் உரையாற்றினார்.
தற்போது பாரதிய ஜனதா ஆட்சியிலும் கிட்டத்தட்ட இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரதமரைப் போன்றே இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை சுப்பிரமணியன் சுவாமி நேரில் சென்று அளித்து வருகிறார்.
அப்படியானால் இந்த சுப்பிரமணியன் சுவாமி யார்? தேர்தல் மூலம் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரா? (அல்லது) இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அரசு தூதுவரா? (அல்லது) இந்திய அரசால் நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளரா? (அல்லது) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புரோக்கரா? இவருக்கு இந்திய அரசாங்கம் என்ன அதிகாரம் அளித்துள்ளது?
அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியே அமைதியாக இருக்கும் போது, ஒட்டு மொத்த இந்தியாவும் தன் கையிலதான் இருக்கிறது என்ற தோற்றத்தை இந்த சுப்பிரமணியன் சுவாமி உலக தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். இது இந்திய ஆட்சியாளர்களையும், ஒட்டு மொத்த இந்திய மக்களையும் அவமதிக்கும் செயல்.
இப்படி இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் சுப்பிரமணியசுவாமியை தேச விரோத தடை சட்டத்தின் கீழ் இந்திய அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.
மக்கள் வரி பணத்தில் இவருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவர் உலக நாடுகள் அனைத்திற்கும் உல்லாசமாக சென்று வருவதற்கு இவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது? இவருடைய வருமானம் என்ன? உலக நாடுகளில் இவருக்கு இருக்கும் இரகசிய தொடர்புகள் என்ன, என்ன? போன்ற விவரங்களை உடனடியாக புலன் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
E.mail:drduraibenjamin@yahoo.in