இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 29.07.2014 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து 5 எந்திரப் படகுகளிலும், இரண்டு வல்லங்களிலும் மீன்பிடிக்கச் சென்ற 50 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை உங்கள் கவனத்துக்கு மிகுந்த வேதனையுடன் கொண்டு வருகிறேன். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதன் மற்றொரு சம்பவமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து சென்ற இந்த மீனவர்கள் 29-ந் தேதி கைது செய்யப்பட்டு இலங்கை காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஏற்கனவே 9 படகுகளில் சென்ற 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பற்றி கடந்த 22-ந் தேதி நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அவர்களும், அவர்களின் படகுகளும் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
கடந்த காலத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 225 தமிழக மீனவர்கள் விடுதலை பெறுவதற்காக முந்தைய நிகழ்வுகளில் உங்கள் அரசு சிறப்பாக செயல்பட்டது. ஆனால், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்த 55 படகுகளை வேண்டுமென்றே இலங்கை அரசு விடுவிக்கவில்லை.
மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் இல்லாவிட்டால், அந்த ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துபோய்விடும். இந்த சூழ்நிலை, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களிடையே அமைதியின்மையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இலங்கை அரசின் வசத்தில் உள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மீண்டும் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகளையும், உபகரணங்களையும் கைப்பற்றி வைத்திருக்கும் மனிதாபிமானமற்ற தன்மையை இலங்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அந்த நாட்டுக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உரிமையையும், இந்தியாவின் ஒரு அங்கமான கச்சத்தீவையும் மீட்டெடுப்பதில் தமிழகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு பற்றி மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம்.
கச்சத்தீவு தொடர்பான 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் சட்ட ரீதியாக செல்லுமா என்பது பற்றி எனது தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்பதால், இலங்கை, இந்தியாவுக்கு இடையேயான சர்வதேச கடல் எல்லை குறித்த விவகாரம், முற்றுப்பெற்ற ஒன்றாக இந்திய அரசு கருதிவிடக்கூடாது.
இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் அவர்களின் படகுகள் கைப்பற்றப்படும் விஷயத்தை தூதரக மட்டத்திற்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த 43 மீனவர்களையும் சேர்த்து 93 தமிழக மீனவர்களையும், ஏற்கனவே கைப்பற்றப்பட்டிருந்த 55 படகுகளையும் சேர்த்து 62 படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.