கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

DSCF0859DSCF0851தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும், சம்பள பட்டுவாடாவில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பள பட்டுவாடா செய்ய வடக்கு திட்டங்குளத்திற்கு தனியாக ஒரு உதவியாளரை நியமிக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர் சங்கம் சார்பில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (01.08.2014) காத்திருக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து 31.07.2014 அன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் தங்கவேல் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அப்போது தேசிய ஊரக தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதில் சென்ட்ரல் வங்கி மேலாளர் பாஸ்கரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்ராஜ், கன்னியம்மாள், ஏ.ஐ.டி.யூ.சி ஒன்றிய அமைப்பாளர் உத்தண்டராமன், மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், கட்டுமான தொழிற்சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜானகி, இந்திய தேசிய மாதர் சம்மேளன தாலுகா செயலாளர் சுந்தரி, மாரீஸ்வரி, வார்டு உறுப்பினர் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

கூட்டத்தில் வடக்குதிட்டங்குளம், தெற்கு திட்டங்குளத்துக்கு பொதுவான ஒரு இடத்தில் சென்ட்ரல் வங்கி ஏ.டி.எம் மையம் அமைப்பது, அதுவரையிலும் சென்ட்ரல் வங்கியில் நேரடியாகவே சம்பளப்பணத்தை தேசிய ஊரக தொழிலாளர்கள் பெற்று கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த காத்திருக்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

-கோ.சரவணக்குமார்.