சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் இலங்கைக்கு நேற்று (16.09.2014) வருகை தந்துள்ளார். சீன அதிபரின் இலங்கை வருகை மிகவும் முக்கியத்தத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நேற்று முற்பகல் இலங்கையை வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின் பின்ங்ற்கு விமான நிலையத்தில் சிகப்பு கம்பள வரவேற்பு சிறப்பாக அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் சீன அதிபரை வரவேற்கும் நிகழ்வு காலிமுகத்திடலில் அமைந்துள்ள இலங்கை ஜனாதிபதி செயலக முன்றலில் நேற்று மாலை இடம்பெற்றது.
அதனையடுத்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், சீன அதிபருக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ சந்திப்பு இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்கும் திட்டத்தின் கீழ் சீனாவும், இலங்கையும் 20-க்கும் அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இதையடுத்து, 1.34 பில்லியன் அமெரிக்க டாலர் சீன கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இறுதிக் கட்டம் சீன அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஒரு நாட்டின் பிரச்சனையில் பிற நாடுகளோ அல்லது ஐ.நா. போன்ற அமைப்புகளோ தலையிடுவதை எதிர்ப்பது என்ற கொள்கையில் சீனாவும், இலங்கையும் ஒற்றுமையாக உள்ளன.
அத்துடன் இரண்டு நாடுகளிலும் அரசியல், சமூக கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு சமாதானமான தீர்வுகள் விசயத்திலும் ஏனைய நாடுகளின் அமைப்புக்களின் தலையீடுகளை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
இதேவேளை இலங்கையின் ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்க விசயங்களில் சீனா ஆதரவை வழங்கும் என்று சீன அதிபர் ஷி ஜின் பின்ங் தெரிவித்துள்ளார்.
மேலும், நுவன்புர அதிவேக பாதை, வடக்கு அதிவேக பாதை, ஜின் நிலவள ஆறு திசை திருப்பல், தேசிய விமான நிலையங்களின் புனரமைப்பு, பெட்ரோலிய சுத்திகரிப்பு உட்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவியை சீனா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டு நாடுகளும் கரையோரப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, ஆராய்ச்சியும் காப்பாற்றுதலும், கடல் பாதுகாப்பு போன்ற விசயங்களிலும் இணக்கங்களை கண்டுள்ளன. அத்துடன் இரண்டு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை பலப்படுத்த இணங்கியுள்ளன.
இதன்படி இராணுவப் பயிற்சிகள், அதிகாரி பயிற்சிகள், விஞ்ஞான உதவிகள், பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் போன்றவற்றை இரு நாடுகளும் மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கை மற்றும் சீனாவிடம் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-எஸ்.சதிஸ்சர்மா.