தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் அந்தோணி கிரேசி, பா.ஜனதா சார்பில் ஜெயலட்சுமி மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுபோன்று 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலும் இன்று நடந்தது. இதற்காக 250 வாக்குச்சாவடிகள் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 7.05 மணிக்கு பா.ஜனதா வேட்பாளர் ஜெயலட்சுமியும், 8.00 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேசியும் தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை
புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ரவிக்குமார், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை ஆகியோர் வாக்களித்தனர்.
பதட்டம் நிறைந்த 114 வாக்குச்சாவடிகளில் காமிரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஊரக உள்ளாட்சி பகுதியில் ஓட்டப்பிடாரம் பகுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஒரு பதவிக்கும், உடன்குடி யூனியனில் 2–வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், மேலதட்டப்பாறை, ராஜாபுதுக்குடி கிராம ஊராட்சி தலைவர், தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, உடன்குடி, கோவில்பட்டி யூனியன்களில் உள்ள 10 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் சேர்த்து ஊரக உள்ளாட்சியில் 15 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதற்காக 154 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி இரண்டும் சேர்த்து மொத்தம் 20 பதவிகளுக்கு 408 வாக்குச்சாவடிகளில் இன்று தேர்தல் நடந்தது.
-பி.கணேசன் @ இசக்கி.