அம்மா உணவகத்தை திறந்து வைத்து, உணவை ருசிப்பார்த்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா!

pr220914d pr220914e pr220914cசென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் “அம்மா உணவகங்கள்” தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 19.02.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியில் 203 அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி மற்றும் பொங்கல் சாம்பார், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் ஆகியவை தரமானதாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏழை எளிய மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக 21.02.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தார்.

பொது மக்களிடையே மாபெரும் வரவேற்பினைப் பெற்றுள்ள அம்மா உணவகங்கள் குறித்து செய்தி அறிந்து, இந்தத் திட்டத்தினை தாங்களும் செயல்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் எகிப்து நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளும், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அம்மா உணவகங்களை நேரில் பார்வையிட்டு, அவை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்து, சிறப்பாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினை பாராட்டியுள்ளனர்.

இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரும் பயனளிக்கும் அம்மா உணவகங்களின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில், மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநக ராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “அம்மா உணவகத்தை” தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொது மக்களுக்கு உணவு வழங்கி சேவையைத் துவக்கி வைத்தார்.

மேலும், இந்த விழாவில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் கொஞ்சம் உணவினை சாப்பிட்டு ருசிப்பார்த்தார். இதை அங்கு கூடியிருந்த அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் இங்கு அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளோடு உடனிருப்பவர்களும் உணவு வகைகளை உட்கொள்வதால் அவற்றை மிகுந்த கவனத்துடன் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in