வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன் என்று வள்ளலார் சொன்னார். தன்னிடம் அடைக்கலமாக வந்த புறாவுக்காக அதற்கு நிகராக தன்னுடைய சதையை அரிந்து பருந்துக்கு கொடுத்தான் சிபி சக்ரவர்த்தி, முல்லைக் கொடிக்கு தனது தேரைக் கொடுத்தான் பாரி. இரண்டு வண்டுகள் இணைந்து இருப்பதைக் கண்டு அவற்றின் இன்பம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக தனது குதிரையின் அணிகலங்களையெல்லாம் கலைந்து அமைதியாக நடந்து, கடந்து வந்தான் ஒரு மன்னன். இது தமிழர்களின் வரலாறு.
அந்த கொடைதிறன் இன்னும் நம்மிடம் குறைந்து போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஏலூர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் கல்வி மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் வீடு வீடாக, கடை கடையாக சென்று ரூபாய் 6,500/- நிதி திரட்டியுள்ளனர்.
இப்பணிக்கு உறுதுணையாக மேற்படி கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும், பள்ளி மாணாக்கர்களும் மனித நேயத்துடன் உதவியுள்ளனர். அவர்கள் வசூலித்த நிதியை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக மாற்றி, எமது ‘உள்ளாட்சித்தகவல்’ செய்தியாளர் P.மோகன்ராஜுவிடம் ஒப்படைத்தனர்.
அதை ஜம்மு & காஷ்மீர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு, பாரத பிரதமருக்கு நமது ‘உள்ளாட்சித்தகவல்’ செய்தியாளர் P.மோகன்ராஜு இன்று (26.09.2014) அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு உத்திரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டப்போதும் இதே போன்று நிவாரண நிதியை திரட்டி நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தின் மூலம் உத்திரகாண்ட் மாநில முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 -ம் தேதி தமிழகத்தை ஆழிப்பேரலை தாக்கிய போது உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் உதவினார்கள். இப்போது ஜம்மு & காஷ்மீரில் நமது சகோதர, சகோதரிகள் துன்ப வெள்ளத்தில் மூழ்கிக்கிடக்கும் போது நம்மால் முடிந்த வரை நாமும் உதவுவோம். ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்பதை செயலில் நிரூபிப்போம். இல்லாமை வேறு, இயலாமை வேறு, விரும்பாமை பாவம் என்ற அவ்வையின் தர்ம நெறியை மனதில் நிறுத்துவோம்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்.