தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இக்காலத்தில் துறை வாரியாக புயல், வெள்ளம் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (30.9.2014) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை,பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், சுகாதாரத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்துக்கள், தூத்துக்குடி மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற துறைகள் மழை வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் கூறியதாவது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்வதற்கு காரணமாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும். நீர்நிலைகளில் உபரி நீர் திறந்து விட நேரிட்டால் முன்கூட்டியே பொதுமக்களுக்கும்இ உள்ளுர் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கும்இ தொலைகாட்சி மற்றும் பத்திரிகை வாரியாக உரிய தகவல் அளிக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனுக்குடன் அகற்றிட வேண்டும். சுகாதார துறையினர் தேவையான அளவு மருந்துகளை இருப்பு வைத்திட வேண்டும். கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 01.10.2014 முதல் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளை தகுந்த பணியாளர்களை கொண்டு செயல்பட வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.முத்து, தூத்துக்குடி சார் ஆட்சியர் எஸ்.கோபால சுந்தரராஜ், கோவில்பட்டி சார் ஆட்சியர் டாக்டர்.விஜயகார்த்திக்கேயன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-பி.கணேசன் @ இசக்கி.