அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘உண்ணாவிரத மௌன அறப்போராட்டம்’ புதுடில்லியில் இன்று (02.10.2014) நடைபெற்றது. இவர்கள் அனைவரும் கோஷங்கள் எதுவும் எழுப்பாமல் அமைதியாக காந்தி சிலை முன்பாக அமர்ந்து மௌன அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளே அமைந்துள்ள காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஒருநாள் போராட்டத்தில், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த போராட்டத்திற்கான ஏற்பாட்டளர்களில் ஒருவரான அக்கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவர் வேணுகோபால் கூறும் போது, இது ஒரு அறப்போராட்டம் என்றும் அமைதியாக மட்டுமே தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
அ.இ.அ.தி.மு.க மாநிலங்களைவை உறுப்பினர்களின் தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவரான மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. முக்கிய அலுவல் காரணமாக அவர்கள் டில்லிக்கு வரமுடியாத சூழல் உருவாகியிருப்பதாகவும் அதனாலேயே அவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அக்கட்சியில் மொத்தமுள்ள 47 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 45 பேர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு முன்னாள் மக்களவை உறுப்பினர் முருகேசனும் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.
-சி.மகேந்திரன்.