ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கர்நாடகாவை சேர்ந்த மடாதிபதி ராகவேந்திர பாரதியை கைது செய்ய கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்ய தடை விதிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ராமச்சந்திரபுரா மடாதிபதியாக உள்ள ராகவேந்திர பாரதி, தனது ஆசிரம பக்தைகளில் ஒருவரான திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான அன்சுமதியிடம் கடந்த 2011ம் ஆண்டு முதல் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதையடுத்து ஒருநாள் உன்மீது கடவுளின் கிருபை இறங்கப்போகிறது என்று கூறி ஆசிரமத்தில் தனது அறையில் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன்பிறகு, அன்சுமதியை அழைத்துச் சென்று ராமர் சிலையின் முன்பு நிறுத்தி, இங்கு நடந்ததை வெளியே யாரிடமும் சொல்கக்கூடாது என்று வலுக்கட்டாயமாக சத்தியம் வாங்கியுள்ளார்.
இதே போல் தொடர்ந்து நடந்து கொண்ட அவர் சில நேரங்களில் பிரசாதம் என்று கூறி மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.
2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து பல முறை இதுபோல சாமியார் தன்னிடம் நடந்து கொண்ட போதிலும், அன்சுமதி தனது கணவன் உள்ளிட்ட யாரிடமும் அதுகுறித்து கூறவில்லை.
இந்நிலையில், ரத்தப்போக்கு, தலைவலி போன்ற பிரச்சினை அதிகரித்ததையடுத்து கோபமடைந்த அன்சுமதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி பெங்களூர் பனசங்கரி காவல் நிலையத்தில் சாமியாருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய சாமியார் தரப்பு, சமூகத்தில் தனக்குள்ள நற்பெயரை கெடுக்க அப்பெண் சதி செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
பின்னர் இந்த மனு மீதான விசாரணை நடந்ததையடுத்து சாமியார் மீதான புகாருக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதை உணர்ந்த நீதிமன்றம், சாமியார் மீதான வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடையை விலக்கிக் கொள்வதாகவும், தேவைபட்டால் விசாரணை அதிகாரிகள் அவரை கைது செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-ஆர்.அருண்கேசவன்.