சோனியா காந்தியின் கட்டுப்பாட்டில் மன்மோகன் சிங் இருந்தததைப் போல, சுப்ரமணியன் சுவாமியின் கட்டுப்பாட்டில் பிரதமர் நரேந்திர மோதி சிக்கி உள்ளாரோ? என்ற சந்தேகம் நடுநிலையாளர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தற்போது எழுந்துள்ளது.
நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து இதுநாள் வரை இந்தியாவின் வெளியுறவு கொள்கையிலும், அனைத்து ராஜ்ஜிய உறவுகளிலும் சுப்ரமணியன் சுவாமியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைப்பெற்ற போதும் இதே சுப்பிரமணியன் சுவாமி தான் இலங்கையில் நடைப்பெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றார். இலங்கை இராணுவக் கருத்தரங்கிலும் கலந்து கொண்டு இந்தியாவின் சார்பில் உரையாற்றினார்.
தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலும் கிட்டத்தட்ட இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரதமரைப் போன்றே, இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை சுப்பிரமணியன் சுவாமி நேரில் சென்று அளித்து வருகிறார்.
அப்படியானால் இந்த சுப்பிரமணியன் சுவாமி யார்? தேர்தல் மூலம் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரா? (அல்லது) இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அரசு தூதுவரா? (அல்லது) இந்திய அரசால் நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளரா? (அல்லது) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புரோக்கரா? இவருக்கு இந்திய அரசாங்கம் என்ன அதிகாரம் அளித்துள்ளது?
அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சுப்ரமணியன் சுவாமியை ஆடவிட்டு அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதின் மர்மம் என்ன?
இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகளையும், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வெளிநாட்டு பயணத்தையும் தீர்மானிப்பது இந்திய அரசாங்கமா? (அல்லது) சுப்பிரமணியன் சுவாமியா?
இலங்கை நாடாளுமன்றத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றவுள்ளார் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நான் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை விஜயத்துக்கு என்ன சொல்லப் போகிறார்கள்? என்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் 05.10.2014 அன்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
ஒட்டு மொத்த இந்தியாவும் தன் கையிலதான் இருக்கிறது என்ற தோற்றத்தை இந்த சுப்பிரமணியன் சுவாமி உலக தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். இது இந்திய ஆட்சியாளர்களையும், ஒட்டு மொத்த இந்திய மக்களையும் அவமதிக்கும் செயல். இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி என்ன பதில் சொல்ல போகிறார்?
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in