இலட்சக்கணக்கான தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்ததற்காகவும், போர்க்குற்றங்கள் புரிந்ததற்காகவும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியதற்காகவும் ஐ. நா. விசாரணை ஆணையத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சுப்பிரமணியன் சாமி கூறியிருக்கிறார்.
மனித குலத்திற்கு ஒப்பற்றத் தொண்டு புரிந்ததற்காக ஜவகர்லால் நேரு, காமராசர், அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா போன்ற மாபெரும் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை, இரத்தக் கறைப் படிந்த இராஜபக்சேக்கு அளிக்க வேண்டுமென கூசாமல் கூறுகிற சுப்பிரமணியன் சாமி பாரத ரத்னா விருதுக்கே பெரும் இழிவை தேடித் தந்திருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் கொடுமையான நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசி வருகிற சுப்பிரமணியன் சாமி மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. தலைமை முன்வராததை பார்க்கும் போது, அதனுடைய ஒப்புதலுடன்தான் சுப்பிரமணியன் சாமி பேசுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும். உணராவிட்டால் காங்கிரசுக் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட கதி பா.ஜ.க. விற்கும் ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன் என பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-சி.மகேந்திரன்.